பருவம் நிரம்பாமே பாரெல்லாம் உய்ய, * திருவின் வடிவொக்கும் தேவகி பெற்ற * உருவு கரிய ஒளி மணிவண்ணன், * புருவம் இருந்தவா காணீரே பூண்முலையீர் வந்து காணீரே.
பெரியாழ்வார் திருமொழி 1.3.17
திருவடி, திருவிரல்கள், கணைக்கால், முழங்கால்கள், திருத் தொடைகள், சிறுகுழந்தையின் குறி, திருமருங்கு, திருஉதரம், திருமார்பு, திருத் தோள்கள், திருக்கைதலங்கள், திருக்கழுத்து, திருவதரம், திருமுகமண்டலம், திருக்கண்கள் இவைகளுக்குப் பிறகு இந்த பாடலில் திருப் புருவங்களின் அழகை அருளிச் செய்கிறார்.
வயது முதிர்வதற்கு முன்னமே உலகமெல்லாம் உஜ்ஜீவிக்கும்படியாக பெரிய பிராட்டியோடு ஒத்த ஸ்வபாவத்தை உடையவளான தேவகிப் பிராட்டி (நோற்றுப்) பெற்ற ரூபத்தால் கறுத்ததாய் உஜ்ஜவலமான மணி போன்ற வடிவை உடையவனுடைய திருப்புருவங்கள் இருந்தபடியை காணுங்கள் ; ஆபரணம் பூண்ட முலையை உடைய பெண்களே வந்து காணீர் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
சக்கரவர்த்தி திருமகன் போல பருவம் முதிர்ந்த பின் விரோதிகளை ஒழித்து உஜ்ஜீவனம் கொடுத்தது போல் இல்லாமல், பருவம் நிரம்புவதற்கு முன், உலகம் முழுவதும் உஜ்ஜீவிக்கும் வண்ணம், பூதனை, சகடாசுரன், யமளார்ஜுனாதிகளை தொட்டில் பருவம் முதலே அழித்தது சொல்லப்படுகிறது. ஸ்ரீதேவி தாயார் போல் இருக்கும் தேவகி, தவம் இருந்து பெற்ற கரிய உருவாய், ஒளி உடைய மணி போன்ற வடிவம் உடையவனின் திரு புருவங்களின் அழகினை காண வாரீர் என்று ஆபரண அலங்கார முலை உடைய பெண்களை அழைக்கிறாள்.
திருவின் வடிவொக்கும் என்று சொன்னது முன்பு ‘சீதக் கடல் உள்ள அமுதன்ன தேவகி‘ (பெரியாழ்வார் திருமொழி 1.3.1) என்பதை மீண்டும் தெரிவிக்கிறது.
Leave a comment