பணைத்தோள் இளவாய்ச்சி பால் பாய்ந்த கொங்கை, * அணைத்தார் உண்டு கிடந்த இப் பிள்ளை, * இணைக் காலில் வெள்ளித் தளை நின்று இலங்கும், * கணைக்கால் இருந்தவா காணீரே காரிகையீர் வந்து காணீரே.
பெரியாழ்வார் திருமொழி 1.3.3
திருவடி, திருவிரல்களை அனுபவித்த பிறகு இப்போது திரு கணைக்கால்.
மூங்கில் போன்ற தோள்களை உடைய, இளமைப் பருவத்தை உடைய ஆய்ச்சியின் பால் சொரிகிற முலையை திருக்கைகளால் அணைத்து திருவயிறு பூரணம் ஆகும்படி அமுது செய்து (களித்து) கிடந்த இந்த கண்ணனுடைய சேர்த்தி அழகை உடைய திருவடிகளில், வெள்ளித் தண்டை நின்று விளங்கும் கணைக்கால் இருந்த படியை பாருங்கள்; அழகிய பெண்களே வந்து பாருங்கள் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
பசுமைக்கும் சுற்றுடைமைக்கும் செவிவிக்கும் வேய் போல இருந்துள்ள தோள்களை உடையவளாய் ஆய்ச்சி என்று சொல்வதால் அவள் வர்ணிக்கிறார். அழகுக்கும் பருவத்திற்கும் ஈடாக போக பரவசம் மட்டும் இல்லாமல், பிள்ளையை ஸ்நேகித்து நோக்கிக் கொண்டு போகிறவள் என்பதையும் ‘பால் பாய்ந்த கொங்கை’ என்பதால் சொல்கிறார்.
அன்பினால் பால் சொரிகின்ற என் முலையைத் தன் திருக்கைகளாலே அணைத்து வயிறார உண்டு மகிழ்ந்து இருக்கிற இந்த பிள்ளையின் கால்களில் வெள்ளித்தண்டை விளங்கும் கணைக்காலின் அழகை வந்து காணுங்கள் என்கிறாள்.
Leave a comment