நோக்கி யசோதை நுணுக்கிய மஞ்சளால், * நாக்கு வழித்து நீராட்டும் இந்நம்பிக்கு, * வாக்கும் நயனமும் வாயும் முறுவலும், * மூக்கும் இருந்தவா காணீரே மொய் குழலீர் வந்து காணீரே.
பெரியாழ்வார் திருமொழி (1.3.15)
திருவடி, திருவிரல்கள், கணைக்கால், முழங்கால்கள், திருத் தொடைகள், சிறுகுழந்தையின் குறி, திருமருங்கு, திருஉதரம், திருமார்பு, திருத் தோள்கள், திருக்கைதலங்கள், திருக்கழுத்து, திருவதரம் இவைகளுக்குப் பிறகு இந்த பாடலில் திருமுகமண்டலத்தின் பொதுவான அழகை அருளிச் செய்கிறார்.
யசோதை பிராட்டி, (கண்ணபிரானுடைய திருமேனியின் சௌகரியதிற்கு ஏற்ப, அந்த திருமேனிக்கு ஏற்ற) அரைத்த மஞ்சள் காப்பினால், நாக்கு வழித்து திருமஞ்சனம் செய்கிற இந்த பூரண குணனான கண்ணனுக்கு வாக்கும் திருக்கண்களும், திருவதரமும் (அல்லது) வாய்ந்திருக்கிற மந்தஸ்மிதமும் மூக்கும் இருக்கிற அழகை பாருங்கள்; செறிந்த குழலை உடைய பெண்களே வந்த காணீர் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
வாக்கும் நயனமும் வாயும் முறுவலும், மூக்கும் இருந்தவா என்பதற்கு ‘மாட்டுயர் கற்பகத்தின் வல்லியோ கொழுந்தோ அறியேன்,’ (திருவாய்மொழி 7.7.2), அதாவது, அந்த அவயவங்களுள் திருமூக்கைப்பற்றி இங்குச் சொல்லுமிவள் ‘கற்பகக் கொடியோ அல்லது கற்பகக் கொழுந்தோ என்றே சொல்லலாம் படியுள்ளது, தீர விமர்சித்துப் பார்த்தால் பிறகு தான் என்பெருமானுடைய திருமூக்கு என்று இருந்தது’ என்று மேற்கோள் சொல்கிறார்.
Leave a comment