நாள்களோர் நாலைந்து திங்கள் அளவிலே, * தாளை நிமிர்த்துச் சகடத்தைச் சாடிப்போய், * வாள் கொள் வளை எயிற்று ஆருயிர் வவ்வினான், * தோள்கள் இருந்தவா காணீரே சுரி குழலீர் வந்து காணீரே.
பெரியாழ்வார் திருமொழி (1.3.11)
திருவடி, திருவிரல்கள், கணைக்கால், முழங்கால்கள், திருத் தொடைகள், சிறுகுழந்தையின் குறி, திருமருங்கு, திருஉதரம், திருமார்பு இவைகளுக்குப் பிறகு இந்த பாடலில் திருத் தோள்கள்.
(திருவவதரித்த பின்பு சென்ற) நாள்கள் ஓரு நாலைந்து மாதங்கள் அளவில் சகடாசுரனை காலைத் தூக்கி உதைத்து விட்டு, ஒளி கொண்டதாய் வளைந்து இருக்கிற பற்களை உடைய பூதனையின் அரிய உயிரை அபகரித்தவனுடைய தோள்கள் இருந்த படியை காணுங்கள்; சுருண்ட குழலை உடைய பெண்கள் வந்து காணீர் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
நாலைந்து திங்கள் என்று சொன்னது, ஆழ்வார் நான்கு அல்லது ஐந்து அல்லது ஒன்பது அல்லது இருபது என்று சொல்லி விட முடியாதபடி மயங்கி, கண்ணனுக்கு திருஷ்டி அல்லது தோஷம் வரக்கூடாது என்று மங்களாசாசனம் செய்கிறார்.
தனித்து கண் வளர்ந்து இருக்கிற இடத்தில் அசுரனாக வந்த சகடாசுரனை திருவடிகளால் உதைத்து, சகடத்தை சின்னாபின்னம் ஆக்கியது, சகடம் அனுகூலமாக திருவடிகளை நெருங்காமல், பிரதிகூலமாக வந்ததால் என்கிறார்.
வாள் கொள் வளை எயிற்று ஆருயிர் வவ்வினான் என்று சொன்னது, பூதனையின் உயிரை குடித்ததை சொல்கிறது, அதாவது, ‘பெற்ற தாய் போல் வந்த பேய்ச்சி பெருமுலையூடு, உயிரை வற்ற வாங்கி உண்ட வாயான்‘ (பெரிய திருமொழி 1.3.1) போல என்கிறார். உயிரை வற்ற வாங்குகிற போது நெறித்த தோள்களுடைய அழகினை காணுங்கள் என்கிறார்.
சகடாசுர வதம், பூதனை பிறகு நடந்தது என்றாலும், இங்கே மாற்றி சொல்லி இருப்பது, கண்ணனின் லீலா அதிசயங்களை சொல்லும் போது இந்த வரிசையில் தான் சொல்ல வேண்டும் என்று தோன்றாததாலே என்று உரையாசிரியர் கூறுகிறார்.
Leave a comment