சுருப்பார் குழலி யசோதை முன் சொன்ன * திருப் பாத கேசத்தைத் தென் புதுவைப் பட்டன், * விருப்பால் உரைத்த இருபதோடு ஓன்றும், * உரைப்பார் போய் வைகுந்தத்து ஒன்றுவர் தாமே.
பெரியாழ்வார் 1.3.21
அன்று யசோதை எம்பெருமான் கண்ணனின் பாதம் முதல் கேசம் வரை (திருவடி, திருவிரல்கள், கணைக்கால், முழங்கால்கள், திருத் தொடைகள், சிறுகுழந்தையின் குறி, திருமருங்கு, திருஉதரம், திருமார்பு, திருத் தோள்கள், திருக்கைதலங்கள், திருக்கழுத்து, திருவதரம், திருமுகமண்டலம், திருக்கண்கள், திருப்புருவங்கள், திருமகரக்குழைகள் திருநெற்றி திருகுழல்) வர்ணித்ததை, இப்போது பெரியாழ்வார் அருளிய இந்த பதிகத்தை சொல்பவர்கள் வைகுந்தத்தில் அவனை அனுபவித்து மங்களாசாசனம் செய்து ஒரு காலமும் அவனை பிரியாமல் இருப்பார்கள் என்று சொல்லி முடிக்கிறார்.
வண்டுகள் படிந்து கிடக்கும்படியான தலைமுடியை உடைய யசோதை பிராட்டி அவதார சமயத்தில் (அயல் பெண்களுக்கு அழைத்துக் காட்டி) சொன்ன பாதாதி கேசாந்த வர்ணனைகளை அழகிய வில்லி புத்தூருக்கு நிர்வாககனான பட்டர் பிரான் மிக்க ஆதரத்தால் அருளிச் செய்த இருபத்தொரு பாசுரங்களையும் கற்பவர்கள் (இந்த பிரகர்தி மண்டலத்தைக் கடந்து) போய் ஸ்ரீ வைகுந்தத்தில் பொருந்தி (மங்களாசாசனம் செய்து கொண்டு) இருப்பார்கள் (சூழ்ந்து இருந்து ஏத்துவர் பல்லாண்டு) என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
சுரும்பார் என்பது சுருப்பார் என்று மருவி உள்ளது. குழலில் முடிந்த பூக்களில் உள்ள மதுவை குடிப்பதற்காக எப்போதும் படிந்து இருக்கும் கூந்தலை உடைய யசோதை என்கிறார். அவள் அவதார காலத்தில் அனுபவித்து, பிறர்க்கும் அழைத்து காட்டி சொன்ன பரிவுக்கு ஆழ்வாரின் பரிவும் நிகராகும் என்று உரையாசிரியர் சொல்கிறார்.
கோதை குழலாளஸோதை, பணைத் தோளிளவாய்ச்சி, மைதடங்கண்ணி யசோதை என்பது போல யசோதை பிராட்டியை வர்ணித்து சொன்னவைகளும், உழந்தாள் நறு நெய், அதிரும் கடல் நிற வண்ணன், நோக்கி யசோதை போன்றவைகளால் சொன்ன அவனது லீலைகளையும், மறங்கொள் இரணியன் மார்வை முன் கீண்டான், இருமா மருதம் இறுத்த இப்பிள்ளை, சகடத்தை சாடி போய் வாள்கொள் வளை எயிற்று ஆருயிர் வவ்வினான் போன்ற அவனுக்கே உரித்தான அவதார லீலைகளும், இந்த அவதாரத்திலே பின்னாட்களில் செய்த லீலைகளையும், அவதார காலத்திற்கு பிற்பாடராய் இருந்தாலும், மயர்வர மதிநலம் அருள பெறுகையால் சர்வ காலத்தில் உள்ளதும் பிரகாசிக்கும் படி இவர் அருளி செய்து உள்ளார்.
Leave a comment