எந்தொண்டை வாய்ச்சிங்கம் வாவென்றெடுத்துக் கொண்டு, * அந்தொண்டை வாயமுது ஆதரித்து ஆய்ச்சியர், * தம் தொண்டை வாயால் தருக்கிப் பருகும் இச் * செந் தொண்டை வாய் வந்து காணீரே சேயிழையீர் வந்து காணீரே.
பெரியாழ்வார் திருமொழி 1.3.14
திருவடி, திருவிரல்கள், கணைக்கால், முழங்கால்கள், திருத் தொடைகள், சிறுகுழந்தையின் குறி, திருமருங்கு, திருஉதரம், திருமார்பு, திருத் தோள்கள், திருக்கைதலங்கள், திருக்கழுத்து இவைகளுக்குப் பிறகு இந்த பாடலில் திருவதரத்தின் அழகை அருளிச் செய்கிறார்.
கொவ்வை கனி போன்ற அதரத்தை உடைய, என்னுடைய சிங்கக்குட்டி போன்ற மகனே, வருக என்று, ஒக்கலையில் விரும்பி எடுத்து செல்லும் இடைபெண்கள், அழகிய கொவ்வை கனி போன்ற (அவனது) திருஅதரத்தில் (ஊரும்) அமிர்தத்தை விரும்பி, (இடைபெண்கள்) தங்கள் கோவை வாயால் நெருக்கி பருகும் இந்த சிவந்த கோவை வாயை வந்து பாருங்கள் ; செவ்விய ஆபரணத்தை உடைய பெண்களே (சிவப்பு மாறாமல் இருக்கும் திருபவளத்தை) வந்து காணுங்கள் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
Leave a comment