உழந்தாள் நறு நெய் ஒரோ தடா உண்ண, * இழந்தாள் எரிவினால் ஈர்த்து எழில் மத்தின், * பழந்தாம்பாலோச்சப் பயத்தால் தவழ்ந்தான், * முழந்தாள் இருந்தவா காணீரே முகிழ் முலையீர் வந்து காணீரே.
பெரியாழ்வார் திருமொழி 1.3.4
திருவடி, திருவிரல்கள், கணைக்கால் இவைகளுக்குப் பிறகு இப்போது முழங்கால் ;
சிரமப்பட்டு தடாவில் சேர்த்தவளுடைய மணம் மிக்க நெய்யை ஒவ்வொரு தடாவாக அமுது செய்த அளவில், (பிள்ளையை) இழந்தாளாக நினைத்த தாய், (பயத்தினால் வந்த) வயிற்று எரிச்சலால் (கையைப் பிடித்து) இழுத்து அழகிய மத்தினால் (சுற்றிக் கடைந்த) பழம் தாம்பினால் அடிப்பதாக ஓங்க, அச்சத்தால் (அதில் இருந்து தப்பிப் போக) தவழ்ந்தவனுடைய முழங்கால்களை இருந்தபடியை காணுங்கள்; முகிழ்ந்த முலையை உடைய பெண்களே, வந்து காணுங்கள் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
கஷ்டப்பட்டு கடைந்த வெண்ணையை உருக்கி வைத்த நெய்யை ஒன்றும் மீதம் இல்லாதபடி இவன் உண்டான். இவ்வளவு நெய்யை உண்டால் ஜீரணம் ஆகாதே என்ற கவலையில் கையைப் பிடித்து இழுத்து, மத்திலே சுற்றிய தாம்பாலே அடிப்பதாக யசோதையாகிய தான் ஓங்க, அவன் பயத்திலே தப்புவதற்காக தவழ்ந்த அந்த முழங்கால்களின் அழகை காண வாரீர் என்கிறாள்.
Leave a comment