அதிரும் கடல் நிற வண்ணனை ஆய்ச்சி, * மதுர முலையூட்டி வஞ்சித்து வைத்து, * பதறப் படாமே பழந்தாம்பால் ஆர்த்த, * உதரம் இருந்தவா காணீரே ஒளி வளையீர் வந்து காணீரே.
பெரியாழ்வார் திருமொழி 1.3.9
திருவடி, திருவிரல்கள், கணைக்கால், முழங்கால்கள், திருத் தொடைகள், சிறுகுழந்தையின் குறி, திருமருங்கு, திருநாபி (உந்தி) இவைகளுக்குப் பிறகு இந்த பாடலில் திருவுதரம்.
கோஷிக்கின்ற கடலின் நிறம் போன்ற நிறத்தை உடையவனை, திருத்தாயாரான யசோதாய் இனிய மூலைப்பாலை ஊட்டி, வஞ்சனை செய்துவைத்து தன் நினைவு தப்பாதபடி பழகின கயிற்றாலே கட்டின திருவயிறு இருந்தபடியை காணுங்கள்; ஒலிமிக்க வளையை உடைய பெண்களே வந்து காணீர் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
கண்ணபிரான் இளம் வயதில் இடையர் வீடுகளுக்கு சென்று அங்கு பால், தயிர், வெண்ணெய் முதலியவற்றை களவாடியதை அவர்கள் யசோதையிடம் முறையிட, கண்ணனை வயிற்றில் கயிற்றினால் கட்டி உரலோடு வைத்திருந்த வயிற்றினை காண வாரீர் என்று அழைக்கிறாள்.
அதிரும் கடல் என்று சொன்னதால், இவனுடைய அடங்காமை தோன்றுகிறது என்று சொல்கிறார். வஞ்சித்து என்று சொல்வது, தாயானவள், தான் இவனை கட்ட தேடுகிற தரி அவன் அறியாதபடி, வஞ்சித்து வைத்தது சொல்லப்படுகிறது. கன்றுகளும் பசுக்களும் கட்டிப் பழகிய ஒன்றுக்கும் உதவாத தாம்பினால் கட்டிய கயிற்றில் தழும்பு காணலாம் படி இருக்கிற திரு வயிறு அழகு இருக்கிறபடியை காணுங்கள் என்கிறார்.
Leave a comment