பத்து நாளும் கடந்த இரண்டாநாள், * எத்திசையும் சய மரம் கோடித்து, * மத்த மாமலை தாங்கிய மைந்தனை, * உத்தானம் செய்து உகந்தனர் ஆயரே.
பெரியாழ்வார் திருமொழி (1.2.8)
பத்து நாளும் கழிந்த இரண்டாம் நாளான நாம கரண தினத்தில் எல்லா திக்குகளிலும் ஜயத்தை குறிக்கும் தோரணங்களை நாட்டி அலங்கரித்து மதித்த யானைகளை உடைய (கோவர்த்தனம்) என்னும் மலையை தரித்துக் கொண்டு நின்ற மிடுக்கனான கண்ணனை இடையர்கள் கைத்தலத்தில் வைத்து கொண்டு சந்தோஷித்தார்கள் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
கோவர்த்தன மலையை எடுத்துக் குடையாகப் பிடித்துக் காத்து அருளிய கண்ணனை அவனுக்கு பெயர் சுட்டும் நாளில் இடையர்கள் ஸ்ரீகிருஷ்ணனென்று திருநாமமிட்டு ஆனந்தத்துடன் இருந்தார்கள். கண்ணனுக்கு திருநாமம் சுடுவதற்கு பின் நடந்த நிகழ்ச்சி கோவர்த்தன மலையை தூக்கி காத்தது; அவனுக்கு இந்த திருவிளையாடல், ஒரு சரித்திரமாக இருக்க போவதால், ஆழ்வார் அதனை முன்பே இங்கே கூறுகிறார் என்று கொள்ளலாம்.
Leave a comment