கையும் காலும் நிமிர்த்துக் கடார நீர், * பைய வாட்டிப் பசுஞ் சிறு மஞ்சளால் * ஐய நா வழித்தாளுக்கு அங்காந்திட, * வையம் எழும் கண்டாள் பிள்ளை வாயுளே.
பெரியாழ்வார் 1.2.6
திருக் கைகளையும் திருவடிகளையும் நிமிர்த்து கடாரத்தில் திருமஞ்சனத்தாலே சிறிய பசு மஞ்சள் சாற்றி திருமேனிக்குப் பாங்காக நீராட்டி மெல்லிய நாக்கை வழித்த தாய்க்கு (பிள்ளையானவன்) வாய்யைத் திறக்க பிள்ளையின் (கண்ணனின்) வாயின் உள்ளே சப்த லோகங்களையும் பார்த்தாள் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
யசோதை ஒருநாள் கிருஷ்ணனை குளிப்பாட்டும் போது குழந்தையின் கையையும் காலையும் நீட்டி நிமிர்த்துப் பசுமஞ்சளைப் பூசி, நல்ல வாசனை திரவியங்களை சேர்த்து காய்ச்சின தண்ணீரைக் கொண்டு குளிப்பாட்டி, முடிவில் மஞ்சள் கொண்டு நாக்கு வழிக்கும் போது குழந்தை வாயைத் திறக்க, அந்த வாயிலே எல்லா உலகங்களையும் கண்டாள். அர்ஜுனனுக்கு ஞான கண்களை அளித்து, தன்னுடைய விஸ்வரூபத்தை காட்டிக்கொடுத்த கண்ணன், யசோதைக்கும் ஞான கண்களை கொடுத்து தன்னுடைய திருவாயில் எல்லா உலங்களை காட்டுகிறான்.
Leave a comment