திவ்ய பிரபந்தம்

Home

1.2.1 வண்ண மாடங்கள் சூழ்

வண்ண மாடங்கள் சூழ் திருக்கோட்டியூர், * கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில், * எண்ணெய் சுண்ணம் எதிரெதிர் தூவிடக், * கண்ணன் முற்றம் கலந்து அளராயிற்றே.

பெரியாழ்வார் திருமொழி (1.2.1)

இந்த பதிகம் முழுவதும், கண்ணன் மேல் உள்ள பரிவால், அவனது வளர்த்த தாய் யசோதையாகவே தன்னை கருதி கண்ணன் அவதாரம் செய்ய முடிவு செய்யபட்டதில் இருந்து பாடுகிறார்.

திருக்கோட்டியூரில் எழுந்தருளியிருக்கிற எம்பெருமான் திருவாய்ப்படியில் நந்தகோபர் திருமாளிகையில் ஸ்ரீகிருஷ்ணனாக அவதரித்த போது அங்கு உள்ளவர்கள் எல்லோரும் ஆனந்தம் அடைந்து, எண்ணையையும் மஞ்சள் பொடியையும் ஒருவர் மேல் ஒருவர் தூவிக் கொள்ள, அவ்விரண்டும் ஒன்று சேர்ந்து, திருமாளிகையின் முற்றம் முழுவதும் சேறு ஆகி விட்டது. தேவர்கள் கூட்டமாக ஆலோசித்த இடம் ஆதலால் இதற்கு கோஷ்டீபுரம் அல்லது கோஷ்ட்டியூர் என்று அழைக்கபடுகிறது.

அழகிய மாடங்களாலே சூழப்பட்ட திருக்கோஷ்டியூரில் அடர்த்தியான கேசத்தை உடையவனாய், கல்யாண குண பரிபூர்ணனாய், கிருஷ்ணன் ஸ்ரீ நந்த கோபருடைய இனிய மாளிகையில் திருவவதரித்து அதனால், எண்ணையையும், மஞ்சள் பொடியையும் ஒருவருக்கு ஒருவர் எதிர்த்து தூவ, விசாலமாய் உள்ள முற்றமானது எண்ணை மற்றும் மஞ்சள் பொடியும் சேர்ந்து சேராய் விட்டது என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

வண்ண நல்மணியும் மரகதமும் அழுத்தி நிழல் எழும் திண்ணை சூழ் திருக்கோட்டியூர்‘ (பெரியாழ்வார் திருமொழி 4.4.3) என்பது வண்ண மாடங்கள் சூழ் என்பதற்கு விளக்கம்.

பிறந்தினில் என்று சொன்னது, ஸ்ரீ மதுராவில் சிறைகூடம் போல இல்லாமல், எல்லா யோக்கியதைகளும் பொருந்திய ஸ்ரீ நந்தகோபர் திருமாளிகை ஆகிய இல்லத்தில் பிறந்ததாகச் சொல்கிறார்.

Leave a comment