திவ்ய பிரபந்தம்

Home

1.2.3 பேணிச் சீருடைப் பிள்ளை

பேணிச் சீருடைப் பிள்ளை பிறந்தினில், * காணத்தாம் புகுவார், புக்குப் போதுவார், * ஆணொப்பார் இவன் நேரில்லை காண், * திருவோணத் தான் உலகு ஆளும் என்பார்களே.

குணங்களை உடைய பிள்ளையான கிருஷ்ணன், கம்ஸனை சேர்ந்தவர்கள் கண் படாதபடி தன்னை காத்து வந்து பிறந்த அளவில் ஆய்ப்பாடி ஆயர்கள் (பிள்ளையை) காண ஆசைப்பட்டு உள்ளே நுழைவாரும் உள்ளேபோய் கண்டு புறப்படுவாரும், ஆண்களில் இவனோடு ஒத்தவர் ஒருவரும் இல்லை என்றும், (இவன்) சர்வேஸ்வரனுடைய லோகங்களை எல்லாம் ஆள கடவன் என்று சொல்லுவாருமாக ஆனார்கள் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

கண்ணன் அவதரித்தபோது அந்தக் குழந்தையைப் பார்க்க நந்தகோபர் திருமாளிகையில் புக, பார்த்தவர்கள் வெளியில் புறப்பட்டு வர, ‘இவன் எல்லாரைக் காட்டிலும் லக்ஷணங்கள் அமைந்து இருப்பதனால் இவன் உபய விபூதி நிர்வகிக்கும் எம்பெருமான்’ என்று சொல்லிக் கொண்டு இருந்தார்கள்.

பேணிச் சீருடைப் பிள்ளை என்றது, அவதரித்தவுடன், கண்ணன் தாய் தந்தை சொன்னதை கேட்டது. பிறந்தபோது, நான்கு திருக்கரங்களுடன் திவ்ய ரூபத்தை காட்டியதும் தாய் தந்தை கம்சனின் கோபத்திற்கு பயந்து சாதாரண குழந்தை போல காட்சி அள்ளிக்க வேண்டியதும் அதே போல கண்ணன் செய்ததை இங்கே குறிப்பிடுகிறார்.

ஆணொப்பார் இவன் நேரில்லை என்றது, லக்ஷண சாஸ்திரங்களின்படி இவனுக்கு நிகர் யாரும் இல்லை என்றும், எதிரிகள் யாரும் இல்லை என்றும் கொள்ளலாம்.

பெரியாழ்வார் திருமொழி (1.2.3)

Leave a comment