திவ்ய பிரபந்தம்

Home

1.2.9 கிடக்கில் தொட்டில்

கிடக்கில் தொட்டில் கிழிய உதைத்திடும், * எடுத்துக் கொள்ளில் மருங்கை இறுத்திடும், * ஒடுக்கிப் புல்கில் உதரத்தே பாய்ந்திடும், * மிடுக்கு இலாமையால் நான் மெலிந்தேன் நங்காய்.

பெரியாழ்வார் திருமொழி (1.2.9)

கண்ணன் பருவத்திற்கு தகுதி இல்லாத சேஷ்டிதங்களை சொல்லி, திருத்தாயார் சொன்ன பாசுரத்தை அவளான பாவனையில் தாம் அனுபவித்து இனியர் ஆகிறார்.

பூர்ணைகளான ஸ்த்ரீகளே, இந்த பிள்ளை தொட்டிலில் கிடந்தால் தொட்டிலானது சிதிலம் அடையும்படி உதைக்கிறான்; இடுப்பில் வைத்துக் கொண்டால், இடுப்பை முறிக்கிறான்; மார்பில் அணைத்துக் கொண்டால் வயிற்றில் பாய்கிறான்; இந்த விளையாட்டுக்களை பொறுக்க வல்ல சக்தி இல்லாமையால் நான் மிகவும் இளைத்தேன் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

யசோதை கண்ணனுடைய பருவத்துக்குத் தகுதியில்லாத செயல்களைச் செய்வதாக இப்பாசுரம் சொல்கிறது. கண்ணனை தொட்டிலில் விட்டால், தொட்டில் கிழிந்து போகும்படி காலால் உதைக்கிறான்; இடுப்பில் வைத்துக் கொண்டால், நழுவி இடுப்பை முறித்து விடுகிறான். குழந்தைக்கு எவ்வளவு வலிக்குமோ என்று மார்பிலே அணைத்து கொண்டால் கால்களினால் வயிற்றை உதைக்கிறான்.  இப்படி இவன் செய்வதை நினைத்து யசோதையான நான் மிகவும் இளைத்துவிட்டேன் என்கிறாள்.

Leave a comment