திவ்ய பிரபந்தம்

Home

1.2.2 ஓடுவார் விழுவார்

ஓடுவார் விழுவார் உகந்து ஆலிப்பார், * நாடுவார் நம் பிரான் எங்கு உற்றான் என்பார், * பாடுவார்களும் பல் பறை கொட்ட நின்று, * ஆடுவார்களும் ஆயிற்று ஆய்ப்பாடியே.

பெரியாழ்வார் திருமொழி 1.2.2

திருவாய்பாடி, பிரமித்து ஒடுவாரும், சேற்றிலே வழுக்கி விழுவாரும், பிரேமத்தால் கோஷம் போடுவாரும், பிள்ளையை தேடுவாரும், நமக்கு உபகாரகனான கண்ணன் எங்கே உலன் என்பாரும், பாடுவார்களும், பல வாத்தியங்களும் முழங்க அதற்குப் பொருந்தி நர்த்தனம் செய்பவர்களுமாக ஆயிற்று எனபது இந்த பாடலின் பொழிப்புரை.

கோகுலத்தில் உள்ளவர்கள் தங்களுக்கு தலைவரான நந்தகோபர்க்குப் பிள்ளை பிறந்ததாகக் கேள்விப்பட்டு ஆனந்தம் அடைந்து தாம் என்ன செய்வது என்று தெரியாமல், சிலர் ஓடினார்கள்; சிலர் சேற்றிலே வழுக்கி விழுந்தார்கள்; சிலர் உரக்க சப்தமிட்டார்கள். சிலர் எங்கே என்று குழந்தையைத் தேடினார்கள்; சிலர் பாடினார்கள்; சிலர் பறையடிக்க சிலர் அதுக்குத் தகுதியாகக் கூத்தாடினார்கள்; ஆக இப்படி எல்லாரும் சொல்ல முடியாத ஆனந்தத்தில், திருஆய்பாடியில் மாறுதல் அடையாதவர்கள் யாரும் இல்லை என்றபடி இருந்தார்கள்.

Leave a comment