பல்லாண்டு என்று பவித்திரனை, பரமேட்டியை, சார்ங்கம் என்னும், * வில் ஆண்டான் தன்னை வில்லிபுத்தூர் விட்டுசித்தன் விரும்பிய சொல், * நல்லாண்டு என்று நவின்று உரைப்பார் நமோ நாராயணாய என்று, * பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்து இருந்து ஏத்துவர் பல்லாண்டே
பெரியாழ்வார் திருமொழி (1.1.12)
திருப்பல்லாண்டு (12)
(இயற்கையாகவே) பரிசுத்தனாய், மேலான ஸ்தானமான வைகுந்தத்தில் எழுந்தருளி இருப்பவனாய், சாரங்கம் என்ற திருநாமத்தை உடைய வில்லை ஆளும் எம்பெருமானைக் குறித்து, வில்லிபுத்தூரில் அவதரித்த விஷ்ணுசித்தன் என்னும் திருநாமத்தை உடைய பெரியாழ்வார், ‘நித்யமாய் மங்களம் உண்டாக வேண்டும்’ என்று விருப்பத்துடன் அருளிச் செய்த ஸ்ரீ சுக்தியை, (பல்லாண்டு பாடத்தக்க) நல்ல காலம் ஏற்படுகின்றதே என்று இடைவிடாமல் சொல்லுபவர்கள் திருமந்திரத்தை அனுசந்தித்து பரமாத்மாவான நாராயணனை சுற்றிலும் இருந்து கணக்கற்ற காலங்கள் பல்லாண்டு பாடுவார்கள் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
பிரேம பரவசராய் மங்களாசாசனம் செய்கிறார். அநன்ய பிரயோஜனர்களையும், பிரயோஜனாந்திரபரர்களையும் அழைத்த ஆழ்வார் ஸம்ஸாரகளையும் அழைத்து திருத்தாதே முடிக்கக்கூடுமோ என்று அருளிச் செய்கிறார். அதாவது இந்த பிரபந்தத்தை அனுசந்திக்க வல்லவர்கள் (ஸம்ஸாரிகளும்) அனுசந்ததித்தால் திருந்தக் கடவர்கள் என்று கருத்து.
பரமபதத்தில் எழுந்தருளி இருக்கும், எப்பொழுதும் பரிசுத்தனாக சார்ங்கம் என்ற வில்லினை நிர்வகிப்பவனான எம்பெருமான், விஷயத்தில் பெரியாழ்வார் பொங்கும் பரிவாலே பாடின இத்திருப்பல்லாண்டு என்ற திவ்யப்ரபந்தத்தை, நமக்கு நல்ல காலம் வந்து விட்டது என்கிற கொண்டாட்டத்துடன் இந்த பூமியில் பாடுகிறவர்கள் மறுமையில் மோக்ஷலோகத்தை அடைந்து அங்கும் அனேக தேஹங்களை எடுத்துக் கொண்டு எம்பெருமானுடைய நான்கு பக்கங்களிலும் இருந்துகொண்டு மங்களாசஸநம் செய்ய பெறுவார்கள் என்று இந்த பதிகம் படிப்பதன் பலன் சொல்லி முடிக்கிறார்.
பவித்திரனை என்றது ஓரு பாதியில் சுத்தமாக உள்ளவன் என்று சொல்லஅது, முழுவதும் சுத்தமானவன் என்று சொல்வது. இதனால் பரம பாவனத்வம் சொல்லப்படுகிறது. சேதனம் அசேதனம் என்று இவன், வியாபித்தாலும், அவைகளின் தோஷம் இவன் மீது படாது என்றும், நித்ய ஸம்ஸாரியை நிதியசூரிகளுடன் ஒரே இடத்தில் கோவையாக்கும் பவித்திரம் உடையவன் என்றும் கூறுகிறார்.
சார்ங்கம் என்னும் வில் ஆண்டான் என்று சொல்வது, அவன் ஆயுதங்களைக் கொண்டு, இவனை அடையாளம் சொல்வது. சார்ங்கம் ஆண்டான் என்று சொல்லாமல், சார்ங்கம் என்னும் வில் ஆண்டான் என்று சொல்வது, மற்ற ஆயுதங்களையும் சொல்வதற்கு சமம்.
வில்லை உடையவன் என்று சொல்லாமல், வில் ஆண்டான் என்று சொல்வது, யானை வைத்துஇருப்பவன் என்று சொல்லாமல், யானையை நடத்தி செல்ல வல்லவன் (ஆளுபவன்) என்று சொல்வது போல என்கிறார்.
‘ஸ ததர்ஸ ததோ ராமம் திஷ்டந்தமபராஜிதம் …. ஆலி கந்தமி வாகாஸம வஷ்டப்ய மஹத்தநு: || (யுத்த காண்டம், 100-12) அதாவது, ஐயிக்கப்படாதவனும், ஆகாசத்தை அளாவி நிற்கும் பெருவில்லை அழுத்திப் பிடித்துக் கொண்டு இருப்பவனுமான ராமனை அவன் அருகில் பார்த்தான்.
முதல் இரண்டு பாடல்களால், தாம் மங்களாசாசனம் செய்வதாகவும், அடுத்த ஒன்பது பாடல்களில் மற்ற சிலரை அழைத்து அவர்களும் ஆழ்வார் குழுவில் சேர, அவர்களும் மங்களாசாசனம் செய்வதாகவும் சொல்லியவர், இந்த பாடலில் அவர் சொற்களாக சொல்லப்படுவது ஏன் என்று கேட்டு விடை அருளிச்செய்கிறார். மற்ற பிரயோஜனத்தை வேண்டும் ஸம்ஸாரிகளுக்கும், பகவத் பிரபாவத்தாலே, மங்களாசாசனம் பண்ணுவதற்கு யோக்கியதை உண்டு என்னும் இந்த அர்த்தத்தின் சத்தைக்காகவும், மங்களாசாசனத்தில் தனக்கு உண்டான பிரீதியாலும் அவரது சொல்லாக வெளிப்பட்டது என்கிறார்.
விட்டுசித்தன் என்பது, ஆழ்வார் விட்டாலும், அவன் விடாதே, அவன் பேறாக, ஆழ்வார் உள்ளத்தை விடமாட்டாதே ‘விட்டு சித்தன் மனத்தே கோவில் கொண்ட கோவலன்’ (பெரியாழ்வார் திருமொழி 5.4.11) என்று பாடியது குறிப்பிடப் பட்டுள்ளது.
நல்லாண்டு என்று சொன்னது, இந்த பாசுரங்களை பாடுவதற்கு ஏகாந்தமான காலம் என்று காலத்தை கொண்டாடுகிறார். நவின்று உரைப்பார் என்றது கற்றுக்கொள்வதும், இடைவிடாமல் சொல்வதும் ஆகும். பல்லாண்டும் என்றது, பல காலம் என்றும், கால தத்வம் இல்லாத தேசத்தில் / இடத்தில் வர்த்திப்பவன் (உறையும்) ஆகையால் அவனுக்கு சொல்லிக்கொண்டே இருப்பது என்கிறார்.
பரமாத்மனை என்றது தனக்கு மேல் என்று ஒன்று இல்லாததை சொல்கிறது. இதனால் அமங்களங்களுக்கு அவகாசம் இல்லாதவன் என்றும் இன்னொருவர் மங்களாசாசனம் செய்வதால் ஓரு ஏற்றமும் ஏற்படாது என்று இருப்பவன் என்றும் சொல்கிறது.
சூழ்ந்து இருந்து ஏத்துவர் என்று சொல்வது, ‘நமோ நமஸ் தேஸ்து ஸஹஸ்ர க்ருத்வ: * புநஸ்ச பூயோ பி நமோ நமஸ்தே * நம: புரஸ்தாதத ப்ருஷ்டதஸ்தே * நமோ ஸ்துதே ஸர்வத ஏவ ஸர்வ :’ (கீதை 11.39) அதாவது, உனக்கு ஆயிரம் தடவை நமஸ்காரம்; மறுபடியும், மறுபடியும் உனக்கு நமஸ்காரம்; எல்லாமாய் இருப்பவனே! உனக்கு முன்னும் பின்னும் நமஸ்காரம்; உனக்கு எல்லாவிடத்திலும் நமஸ்காரம்’ என்று சொல்வது போல முன்னும் பின்னும் நின்று அவன் அழகில் ஈடுபடுவது என்கிறார்.
Leave a comment