நெய்யிடை நல்லதோர் சோறும் நியதமும் அத்தாணிச் சேவகமும், * கையடைக் காயும் கழுத்துக்குப் பூணொடு காதுக்குக் குண்டலமும், * மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்து, என்னை வெள்ளுயிர் ஆக்கவல்ல, * பையுடை நாகப் பகைக் கொடியானுக்குப் பல்லாண்டு கூறுவனே
பெரியாழ்வார் திருமொழி 1.1.8
திருபல்லாண்டு 8
பாகவத்லாபார்த்திகள் தங்கள் பெருமையை (எந்தை தந்தை என்று ஏழு தலைமுறை) சொல்லி கொண்டு வந்தார்கள். கைவல்யார்த்திகள் தாங்கள் திருந்தியை சொல்லி சக்கர இலச்சினை இட்டு வந்ததை சொன்னார்கள். ஐந்தாவது பாசுரத்தில் ஐஸ்வர்யார்த்திகளை அழைத்ததற்கு, அவர்கள் தாங்கள் திருந்தி ஐஸ்வரியத்தை கைவிட்டு, ஐஸ்வரியத்தை கொடுத்த உபகாரகனுக்கு தோற்று சுத்த ஸ்வபாத்துடன் உபகாரகனான எம்பெருமானுக்கு மங்களாசாஸனம் செய்வதற்கு, ஆழ்வாருடன் சேர்ந்து கொண்டதை சொல்வது இந்த பாடல்.
நெய்யின் நடுவில் இருக்கும் பாவசுத்தியுடன் இடப்பட்டதாய், ஒப்பற்ற சுவையை உடையதான பிரசாதத்தையும் எப்போதும் பிரிவில்லாத சேவையையும், வெற்றிலை பாக்கையும் கழுத்துக்கு ஆபரணமான குண்டலத்தையும் உடம்பிலே பூசத்தக்க பரிமளம் நிறைந்த ஒப்பற்ற சந்தனமும் கொடுத்து (மிகவும் பலவீனமான) என்னை சுத்த ஸ்வபாவனாக ஆக்க வல்ல படங்களை உடைய சர்ப்பத்துக்கு விரோதியான கருடனை கோடியாக உடையவனுக்கு மங்களாசாசனம் பண்ணக் கடவேன் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
நெய்யிடை என்று சொன்னதால் நெய்யின் நடுவில் சோறு என்கிற நெய் அளவை சொல்கிறது. இதனால் போஷகத்தை சொல்லி, அதனை அவன் கொடுத்ததையும் சொல்கிறது.
நல்லதோர் சோறும் என்பது இட்டவன் இட்டோம் என்று இருத்தல், உண்டவன், இதற்கு நாம் என்ன செய்வோம் என்று இருத்தல் என்கிறார். (இது தாய், மகனுக்கு இடும் சோற்றுக்கு இல்லை என்கிறார்). சேஷ பூதன் சேஷிக்கு இடுவது போல உள்ளது என்கிறார். பாவ சுத்தி மட்டும் இல்லாமல், அகங்காரம் இல்லாமல், பக்தியுடன் இடுவது என்கிறார். ஈஸ்வரனும் பக்தாநாம் என்கிற நினைவாலேயும் வாத்சல்யத்துடன் இருப்பது; (பக்தாநாம் , அதாவது, உன்னுடைய திவ்ய ஆத்ம ஸ்வரூபமானது உனக்காக இராது; திவ்ய மங்கள விக்ரஹமும் உனக்காக இராது ; திவ்ய ஆயுதங்களும் உனக்காக இருக்க வில்லை; இருப்பிடமான ஸ்ரீவைகுண்டம் முதலியவைகளும் உனக்காக இருக்கவில்லை. இவை எல்லாம் உன் அடியார்களுக்காக இருக்கும் என்று பொருள். இப்படி அடியவர்களுக்கு பரதந்தரமான ஸ்வரூப ரூப குண விபூதிகளை உடையவன் ஆயிருந்த போதிலும், புருஷஸூக்தத்தில் சொல்லப்பட்ட ஸர்வாதிகனாயிருக்கும் தன்மையுடன் பக்தர்களுக்காக நீ பிரகாசிக்கிறாய்.) இது ஐஸ்வர்யார்த்திகள் இடும் சோறு என்கிறார்.
அநன்யபிரயோஜனர் ஈஸ்வரனுக்கு இடும் சோறு, ‘ விதுராந்நாநி புபுஜே சுசீனி குணவந்தி ச“, அதாவது, பரிசுத்தமானவையும், இனியவையுமான
விதுரனுடைய அன்னங்களை கிருஷ்ணன் புஜித்தான் என்பது போல இருக்கும் என்கிறார். இங்கு சுசீனி என்றது, சுத்தங்களாய் இருப்பது. சோற்றுக்கு சுத்தமாவது, துரியோதனன் தன் ஐஸ்வரியத்தை அபிமானித்தான். துரோணர் தன் வரணத்ததால் அபிமானித்தான். பீஷமன் ஞான ஆதிகன் என்று அபிமானித்தான். இவை ஒன்றும் இல்லாமல் பக்தி என்ற ஒன்றுடன் மட்டுமே இருப்பது என்கிறார்.
நியதமும் என்றது ஐஸ்வரியத்தை ஈஸ்வரனே கொடுத்தாலும், அது நிரந்தரம் அன்று என்று சொல்வது; அதனை இழந்தவனுக்கும் சமாதானம் செய்து கொடுப்பது ஈஸ்வரனே என்கிறார். அதே போல எம்பெருமானை தவிர்த்து மற்ற தேவாந்திரங்களை பற்றி இருக்கும் நாட்களும் தன்னை பற்றியே இருப்பதாக கருதப்படும். ஈஸ்வரன் இடும் சோற்றை பெற்று அவனையே இல்லை என்று சொல்லும் நன்றி உடையவர்களே ஸம்ஸாரிகள் என்கிறார். அப்படி இருப்பவர்களுக்கும் உணவு மற்றவற்றைக் கொடுக்குமவன் எம்பெருமான் என்கிறார். இதனால் சர்வேஸ்வரனுக்கு கொடுப்பது என்பது எப்போதும் உள்ள குணம் என்கிறார்.
எம்பெருமான் அவர்களுக்கு வேண்டியவளவு உலக விஷயங்களை கொடுத்தது மட்டுமில்லாது இனி அவர்களுக்கு நல்ல புத்தி உண்டாகும்படி குளிர அருளி ‘‘உலக விஷயங்கள் தற்காலிகம், பகவத் கைங்கர்யமே நிரந்தரம் ” என்னும் அவசியத்தை அவர்களுக்கு உணர்த்தியதையும், அவர்கள் ஆழ்வார் குழுவுடன் சேர்த்து எம்பெருமானுக்கு மங்களாசாஸநம் செய்ய தயாராக உள்ளதாகவும் சொல்லும் பாசுரம்.
அத்தாணிச் சேவகம் என்பது எம்பெருமான் இருக்கும் இடத்தில் கூடவே இருந்து பிரியாமல் செய்கிற கைங்கரியம்.
கையடை காயும் கழுத்துக்குப் பூணொடு காதுக்குக் குண்டலமும் என்பதை பார்ப்போம். இதற்கு முன் தாரக போஷகம் கொடுத்ததை சொல்லி, இப்போது போக்கியம் கொடுப்பதைச் சொல்கிறார். கையடை காய் என்றது திருக் கையால் அருளிய வெற்றிலைப் பாக்கு எனலாம்.
கழுத்துக்குப் பூணொடு காதுக்குக் குண்டலமும் என்பது தேகத்தை அபிமானிப்பவன் ஐஸ்வர்யார்த்தி என்றும் அதை அலங்கரிப்பவன் என்றும் ஞான வைராக்கிய பக்திகளை ஆபரணங்களாக நினைப்பவன் அல்லன் என்றும் சொல்லி, இது தன் கண்களுக்கு விஷயம் இல்லாமலும், உலகத்தார் கொண்டாடுவதாலும் அதுவே தனக்கு பிரயோஜனம் என்று எம்பெருமான் பரிந்து கொடுப்பது என்கிறார். இதற்கு உதாரணம்:
இராமன் இராவண யுத்தம் முடிந்து அயோத்தி திரும்பிய பின், இந்திரனின் வேண்டுகோளின் பேரில், காற்றுத் தேவன், உலகத்தை ஆளும் அரசனுக்கு, பல்வேறு வகையான ரத்தினங்கள் மற்றும் விலையுயர்ந்த கற்களால் இடைமறிக்கப்பட்ட ஒரு பிரகாசமான முத்துக்கள் நிறைந்த ஹாரம் /சங்கிலியை கொடுத்தான். அதனை பெருமாள் பிராட்டிக்கு கொடுத்தபோது, இந்த ஹாரத்தை பிராட்டி, ஓரு கண்ணால் பெருமாளையும், ஒரு கண்ணால் திருவடியையும் (ஹனுமான்) பார்த்து வாங்கினாள் என்கிறார்.
‘ தாமிங்கிதஜ்ஞ : ஸம்ப்ரேக்ஷ்ய பபாஷே ஜநகாத்மஜாம் | * ப்ரதேஹி ஸுபகே ஹாரம் யஸ்ய துஷ்டாஸி ப மிநி (யுத்த காண்டம் 131.80), அதாவது, ஜானகி தன்னைப் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்து, அவள் மனதைப் படிக்கக்கூடிய ராமர், “அழகான சீதா, அழகான இளம் பெண்ணே, நீ மகிழ்ச்சியடைபவருக்கு முத்துச் சங்கிலியைக் கொடு” என்றார். சீதா, ‘எப்போதும் புத்திசாலித்தனம், உறுதிப்பாடு, புகழ், திறமை, திறன், அடக்கம், விவேகம், ஆண்மை, வீரம் மற்றும் புத்திசாலித்தனம் ஆகியவற்றைக் கொண்ட ஒருவருக்கு நீ இந்த ஹாரத்தை / சங்கிலியைக் கொடுக்கலாம்.’ என்றார். ‘முக்தாஹாரம் நரேந்த்ராய ததௌஶக்ர ப்ரசோதிதः (யுத்த காண்டம் 131.71), ‘கோஸல தேசத்தவர்கள் கண்ணோக்கில் இருந்தே கருத்தை அறிபவர்கள் என்பதை நினைவில் கொள்ளலாம். ஸுபகே என்பது, அடியார் ஏற்றம் அறிந்து கொண்டாடுகைக்கு ஈடான சௌபாக்கியம் உனக்கே அன்றோ என்று பெருமாள் திருவுள்ளம் ஆக, ‘உம்முடைய திருவுள்ளத்தாலே அன்றோ நான் கொடுப்பது ‘ என்று பிராட்டி விண்ணப்பம் செய்ய, ‘உன்னுடைய உகப்பிற்கு கொடுக்கலாகாதோ’ என்று பெருமாள் அருளிச்செய்ய அநன்யபிரயோஜனரை ஆதரித்து அணிகலங்களை பூட்டியது போல தாழ்ந்தவனான என்னை ஆதரித்து பூட்டும் என்று ஆழ்வார் சொல்கிறார்.
மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்து என்பதற்கு கோகுலத்தில் இருந்து கம்ஸனை அழிப்பதற்காக மதுராவிற்கு வந்த கண்ணன் கூனியிடம் நல்ல / உயர்ந்த வகை சந்தனம் கேட்டு வாங்கி பூசிக்கொண்டதும், சுவாமி நம்மாழ்வார் ‘ பூசும் சாந்தென் னெஞ்சமே‘ (திருவாய்மொழி 4.3.2) என்று சொன்னதும் மேற்கோள் காட்டப் பாடுகிறது. உன்னுடைய ஆதரத்துடன் / ஆதரவுடன் பூசிய சாந்து என்று கொண்டாடப் படுகிறது. தந்து என்பது, அப்படி கொடுத்த போதே எம்பெருமானின் திருமுகத்தை பார்த்து அதன் கௌரவத்திற்கும் ஓளதார்யத்திற்கும் தோற்று ஐஸ்வரியத்தை அங்கேயே விட்டு, அவன்தான் வேண்டும் என்று ஆவது சொல்லியது.
என்னை வெள்ளுயிர் ஆக்கவல்ல, என்பது பகவானுக்கு உடைமையாய் இருக்கும் ஆத்மாவை, எவனொருவன் தனக்குச் சொந்தமாக நினைக்கிறானோ, ஆத்மாவை அபஹரிப்பவனான அந்தத் திருடனால் செய்யப்படாத பாபம் எது என்று சொல்லி அப்படிபட்ட தாழ்ந்த பிறவியான தன்னை ஸம்சாரத்தின் வாஸனையும் தொடப் பெறாதவர் போல ஆக்கியதை சொல்கிறார்.
பையுடை நாகம் என்று சொல்வது பொதுவாக நாகத்திற்கு பகைவன் என்று அர்த்தத்தில் குறிப்பதே ஆகும். இப்போது யாருக்கு பல்லாண்டு என்று கேட்டு, நாகத்திற்கு பகைவனான கருடனை கொடியில் உடையவனுக்கு பல்லாண்டு என்கிறார். அனந்தசாயியாய் கருடனை கொடியில் கொண்டவனுக்கு பல்லாண்டு என்கிறார்; தகட்டில் அழுத்தின மாணிக்கம் போல இருக்கும் திருவனந்தாழ்வானுடன் சேர்த்தியால் உண்டான அழகு நித்யஸ்ரீ ஆக வேண்டும் என்று பல்லாண்டு பாடுகிறார். ஏதேனும் ஒன்றை கேட்டு வந்தவர்களை தனதாக்கி கொள்வேன் என்னும் வல்லமை உடைய சக்தி நித்யஸ்ரீ ஆக வேண்டும் என்று பல்லாண்டு பாடுகிறார்.
Leave a comment