திவ்ய பிரபந்தம்

Home

1.1.7 தீயிற் பொலிகின்ற

தீயிற் பொலிகின்ற செஞ்சுடர் ஆழி திகழ் திருச்சக்கரத்தின், * கோயிற் பொறியாலே ஒற்றுண்டு நின்று குடிகுடி, * ஆட் செய்கின்றோம், மாயப் பொரு படைவாணனை ஆயிரந் தோளும் பொழி குருதி, * பாயச் சுழற்றிய ஆழி வல்லானுக்குப் பல்லாண்டு கூறுதுமே.

பெரியாழ்வார் திருமொழி 1.1.7

திருபல்லாண்டு 7

நான்காம் பாசுரத்தில், கைவல்யார்த்திகளை ‘‘நாடு நகரமும் நன்கறிய’’ என்று எல்லாரும் தெரிந்துகொள்ளும்படி நீங்கள் வர வேண்டும் என்று அழைத்தார். அவர்களும் அப்படியே வருவது என்று முடிவு செய்து, சங்கு சக்கரங்களாலே திருவிலச்சினை செய்து கொண்டு, எம்பெருமானுக்கு அடிமை செய்பவர்களாய், பாணஸுர யுத்தத்தில் கண்ணனுக்கு சேவை செய்த திருவாழி ஆழ்வானுக்கும் அந்த சேவையை பெற்று கொண்ட கண்ணனுக்கும் அப்பொழுது அங்கு அவர்கள் மங்களா சாஸனம் செய்யாத குறைதீர, இப்பொழுது குடும்பமாகத் திருந்தியதை சொல்லி கொண்டு ஆழ்வாரின் குழுவில் சேர்ந்ததாக சொல்லும் பாசுரம்.

அக்னி, சூரியன் முதலிய பொருள்களைக் காட்டிலும் மிகவும் விளங்குகின்ற சிவந்த ஒளியை உடையவனாய் வட்டமாக பிரகாசிக்கிற ஸ்ரீ சுதர்சன ஆழ்வானுடைய இருப்பிடத்தின் சின்னத்தாலே அடையாளம் செய்யப் பட்டவராய் தலைமுறை தலைமுறையாக அடிமை செய்வதற்காக வந்தோம்; வஞ்சனையாகப் போர் செய்யும் சேனையை உடைய பாணசுரனின் ஆயிரம் தோள்களில் இருந்தும் பொழிகின்ற இரத்தவெள்ளம் பாயும்படியாக சூழற்றப் பெற்ற திருவாழியானை ஏந்தி நிற்க வல்லவனுக்கு திருப்பல்லாண்டு பாடுகிறோம் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

திருவிலச்சினை தரித்து அடிமை செய்கின்றோம் என்று இப்போது சொல்வதால், இதற்கு முன்பு அடிமை செய்வதற்கு ஏற்காத ஸ்வதந்திரர்களாக இருந்தார்கள் என்பது தெரியும்.

தீயிற் பொலிகின்ற செஞ்சுடர் என்பதை பார்க்கலாம். இதில் தீ என்பது சூரிய சந்திர மற்றும் அக்னி போன்றவற்றைக் குறிக்கும். இதைவிட தேஜஸ் என்பது ஒளி மிகுந்தது. பரமபதத்தில் உள்ள தேஜஸ் அதைவிட மிகுந்தது என்றும், அதைவிட தேஜசுடன் விளங்குவது அவனுடைய திருமேனி விக்ரகம் என்றும், அதையும் விட பிரகாசமாக இருப்பது திருவாழி ஆழ்வானுடைய தேஜஸ் என்கிறார். எம்பெருமானின் கார்மேகம் போல் கறுத்த திருமேனி வடிவுக்கு இருட்டறையில் விளக்கு ஏற்றினாற்போல் இருப்பதைச் சொல்கிறார். இதையே இதே ஆழ்வார் ‘வடிவார் சோதி வலத்துறையும் சுடர் ஆழி’ (திருபல்லாண்டு 1.1.2) என்கிறார்.

ஆழி திகழ் திருச்சக்கரம் என்றது நெருங்கிய இந்த இடத்தில் வெள்ளம் போல எங்கும் செல்ல முடியாமல் தன்னிடையே மண்டலம் போல சூழற்றிக் கொண்டு இருப்பதைச் சொல்கிறார். எம்பெருமான் விரோதிகளை அழிப்பதற்கு ஸ்ரீமத் துவாரகையில் இருந்து புறப்படும் முன் வாயில் காப்பவர்கள், ‘யாரை உள்ளே அனுமதிப்பது யாரை தடுப்பது’ என்று கேட்ட போது, ‘சக்கரத்தாலே அடையாளம் செய்யப்பட்டவர்களே நான் வரும் வரையில் உட்புகத் தகுந்தவர்கள் என்றும், நான் வரும் வரையில் சக்ர முத்ரை இல்லாதவர்கள் உட்புகத் தக்கவர் அல்லர் என்றும் சொன்னதை இங்கே நினைவில் கொள்ளலாம்.

குடி குடியாய் ஆட் செய்கின்றோம் என்று சொல்வது, இராமாயணத்தில் ‘ஏததாக்யாநமாயுஷ்யம் படர் ராமாய ணம் நர: * ஸபுத்ர பௌத்ர: ஸகண: ப்ரேத்ய ஸ்வர்க்கே மயதே! ‘ (பால காண்டம் 1:99) அதாவது, ஆயுளை விருத்தி செய்யும் இந்த ராமாயணமாகிய இதிஹாஸத்தைப் படிக்கும் மனிதன், இறந்தவுடன் புத்ர பெளத்ரர்களுடன் கூடியவனாய், உறவினர்களுடன் கூடியவனாய் ஸ்வர்க்கத்தில் சிறப்புறுகிறான் என்று சொல்வது போல, அடிமை செய்ய வந்தோம், அதாவது பல்லாண்டு பாட வந்தோம் என்கிறார். இதற்கு முன் நடந்த எந்த அவதாரச் செயலுக்கு பல்லாண்டு பாட வந்தீர்கள் என்று திருவுள்ளமாக, எங்களை புக நிறுத்தின ஆழ்வானின் வீரப் பிரகாசமான துறையில் பல்லாண்டு பாடுவோம் என்கிறார்.

ஆச்சரியமான (மாய) பொரும் சேனையை உடைய வாணனை என்றும், ஆச்சரியமான பொரும் ஆயுதத்தை உடைய வாணனை என்றும் சொல்கிறார். இதற்கு இவன் செய்தது, சுழற்றியது மட்டுமே, வீச வேண்டியது இல்லை என்கிறார்.

ஆயிரந் தோளும் பொழி குருதி என்றதால் பாணனுக்கு தலை தப்பி விட்டது விளங்கும். கண்ணனுடைய பேரன் அநிருத்தனின் மனைவி உஷை தகப்பனை இழக்கக்கூடாது என்பதற்காகவும், பரிவின்றி வாணனைக் காத்தும் ‘ (திருவாய்மொழி, 3.10.4)ல் சொல்லியபடி தேவதாந்தரங்களைப் பற்றினவர்களுக்கு அவன் ரக்ஷகரல்லர் என்பதை தெரிவிக்கவும் ஆயிற்று.

ஆழிவல்லான் என்பது, தோள் வல்லான், வில் வல்லான், வாள் வல்லான் என்பது போல என்கிறார். ‘ அப்ரமேயம் ஹி தத்தேஜோயஸ்ய ஸா ஜநகாத்மஜா * ந த்வ்ம் ஸமர்த்தஸ் தாம் ஹர்த்தும் ராம சாபா ஆஸ்ராயாம் வந ” (ஆரண்ய காண்டம் 37.18), அதாவது, யாதொரு ராமபிரானிடத்தில் ஜன குமாரியான ஸீதை இருக்கிறாளோ அந்த ராமபிரானுடைய தேஜஸ் அளவற்றதன்றோ, காட்டில் ராமனுடைய வில்லை ஆச்ரயித்திருக்கும் (வில் வல்லான் !) அவளை அபஹரிக்க நீ ஸமர்த்தனல்ல என்று மாரீசன் இராவணனிடம் கூறவது இங்கே மேற்கோள் காட்டப்பட்டு உள்ளது.

அந்த காலத்தில் ஆழியானின் வீர ஸ்ரீக்கும், கிருஷ்ணனின் வீர ஸ்ரீக்கும் பல்லாண்டு பாடாததால் இங்கே இப்போது பல்லாண்டு பாடுகிறோம் என்கிறார்.

Leave a comment