எந்நாள் எம்பெருமான் உன் தனக்கு அடியோம் என்று எழுத்துபட்ட, * அந்நாளே அடியோங்கள் அடிக்குடில் வீடு பெற்று உய்ந்தது காண், * செந்நாள் தோற்றித் திருமதுரையுள் சிலை குனித்து ஐந்தலைய * பைந்நாகத் தலை பாய்ந்தவனே உன்னைப் பல்லாண்டு கூறுதுமே
பெரியாழ்வார் திருமொழி (1.1.10)
திருபல்லாண்டு 10
‘நான்காம் பாசுரத்தில் அழைக்கப்பட்ட கைவல்யார்த்திகள், ஏழாம் பாட்டினால் தாங்கள் திருந்தி ஆழ்வார் குழுவுடன் சேர்ந்ததை சொன்னார்கள். அவர்களை எம்பெருமானை நோக்கி மங்களா சாஸநம் செய்யும்படி ஆழ்வார் கேட்டுக் கொள்வதாக அமைந்துள்ளது இந்த பாசுரம். எம்பெருமான் அவர்கள் கைவல்யத்தை அடைந்து கெட்டுப் போகாத படி அருள் புரிந்து, நல்ல புத்தியை கொடுத்து திருத்தியதால், எம்பெருமானுக்கு பல்லாண்டு பாடுகிறவர்களாக மாறிவிட்டோம் என்கிறார்கள்.
எங்களுக்கு ஸ்வாமியானவனே, (சர்வ சேஷியான) உனக்கு, அடிமைபட்டவர்கள் நாங்கள் என்று அடிமை ஓலை எழுதிக்கொடுத்த நால் எதுவோ அந்த நாளே சேஷபூதர்களான எங்களுடைய வீட்டில் உள்ள மகன், மகள் மற்றும் பேரக் குழந்தைகள் எல்லாம், அடிமைப் பட்டதாய் கைவல்ய மோக்ஷத்தில் இருந்து விடுதலை பெற்று உஜ்ஜீவித்தது; அழகிய திரு நாளிலே திருவவதாரம் செய்து, அழகிய வட மதுரையில் (கம்ஸனுடைய) ஆயுதசாலையில் வில்லை முறித்து, ஐந்து தலைகளை உடைய பரந்த படங்களை உடைய காளியன் என்னும் நாகத்தின் தலையின் மீது ஏறிக் குதித்து அருளின சர்வேசவரனே, உனக்கு பல்லாண்டு / மங்களாசாசனம் செய்யக் கடவோம் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
மங்களாசாசனம் செய்வதற்கு என்று தகுதி கிடைத்து அந்த குழுவில் சேரமுடிந்த அந்த நாளை, எந்நாள் என்று கொண்டாடுகிறார்கள். கிருஷ்ண ஜெயந்தி, நரசிம்மா ஜெயந்தி, ராமஜயந்தி என்று திரு அவதார திருநாட்களை கொண்டாடுவதால் இதனையும் கொண்டாடலாம் என்கிறார்.
பிரயோஜனத்தை எதிர்பார்த்து வந்தவர்களை அநன்யபிரயோஜனர்கள் ஆக்கினார். அடியோம் என்று சொன்னாலே புருஷார்த்தங்களை கொடுக்கும் சேஷி எம்பெருமான், இவர்கள் எழுதிக் கொடுத்ததை கைம்முதல் என்கிறார். ‘ஓமித்யே காக்ஷாரம் ப்ரஹ்ம வ்யாஹரந் மாம் அநுஸ்மரன் * ய : ப்ரயாதி த்யஜந் தேஹம் ஸ யாதி பரமாம் கதிம் || (கீதை 8.13), அதாவது, ‘ப்ரம்ஹ்த்திற்கு வாசகமான ஓம்’ என்ற ஒரெழுத்தை உச்சரித்துக்கொண்டும், என்னை நினைத்துக் கொண்டும் தேஹத்தை எவன் விட்டுச் செல்கிறானோ, அவன் மேலான கதியான ஆத்ம
ஸ்வரூபத்தை அடைகிறான்’ என்று மேற்கோள் காட்டுகிறார். எம்பெருமான் ஆகையால், இவர்கள் ‘உய்ந்தது காண்‘ என்று திருவுள்ளம் பற்றி அருளி செய்கிறார். எம்பெருமான் என்ற பிராப்தியாலும் ‘உன்றனுக்கு’ என்ற சக்தியாலும், ‘எழுத்துப்பட்ட’ என்ற சப்தத்தாலும் காரியம் பலித்தது என்கிறார்.
குடிலும் ‘அடிக்குடில்’ ஆகப்பட்டது. அதாவது தாழ்ந்த பலனைத் தேடி உன் திருவடிகளை வந்து ஒதுங்கின நாங்கள், தாஸ்யர்கள் / உனக்கு அடிமைகள் ஆகப் பெற்றோம். அந்த கிரகத்தில் உள்ள புத்திர பௌத்திரர்களும் அடியராகப் பெற்றோம். இது ‘நல்ல பதத்தால் மனை வாழ்வர் கொண்ட பெண்டிர் மக்களே ‘ (திருவாய்மொழி, 8.10.11) போல ஆகும்.
வீடு பெற்று என்று சொன்னது, அகங்கார மமாகார காரியமான ஐஸ்வர்ய, கைவல்ய தேடல்களில் இருந்து விடுபட்டு உஜ்ஜீவனம் அடைந்ததைச் சொல்கிறார்.
செந்நாள் என்பது அவதார தினம் என்பதால், செம் நாள் என்று அழகிய நாளாக சொல்லப்படுகிறது. தோற்றி என்று சொல்வது, தனித்தன்மையான அழகுடன், அதாவது உகாவாதார் கண்ணுக்கும் விஷயம் ஆகும்படி தோன்றி என்கிறார்.
திருமதுரையுள் என்று சொல்வது, பயம்இல்லாமல் இருக்கும் அயோத்தி போல அன்றி, பகைவனான கம்ஸன் வசிக்கின்ற ஊரில் என்கிறார்.
சிலை குனித்து என்றது, வடமதுரையில் வசிக்காத நீ, ஆயர்பாடியில் வசித்த நீ, மற்றவர்கள் தடுத்தும் கம்ஸன் வசிக்கும் வடமதுரை சென்று கம்ஸனின் ஆயுத சாலையில் புகுந்து, வில்லை முறித்து பூசலை நடத்தினாய்; அனுகூலர்கள் ‘என் ஆகுமோ ‘ என்று அஞ்சும்படியும் கம்ஸனுக்கு மதம் பிடிக்கும்படி நடந்தனையே என்கிறார்.
ஐந்தலைய பைந்நாகத் தலை பாய்ந்தவனே என்பதைப் பார்ப்போம், மேலே சொன்னது மட்டும் இல்லாமல் பிருந்தாவனத்தில் வாழ்ந்த காலத்தில், கம்ஸன் பயம் இல்லாமல் இருந்த காலத்தில், கடிப்பதற்கு ஒன்று அல்ல, ஐந்து தலை படைத்த, குரோதம் மிகுந்த படங்களை உடைய காளியன் தலை மேல் பாய்ந்ததவனே என்கிறார். ஒருமுறை பலராமன் இல்லாமல், கிருஷ்ணன் மட்டும் பிருந்தாவனம் சென்று சொல்லி, தமயன் இல்லாத போது காளியன் தலையில் புகுந்ததை சொல்கிறது.
இங்கு பட்டர் அருளிய இராம கிருஷ்ணா அவதார விசேஷங்கள் சொல்லப்பட்டது. இராமவதாரத்தில் பிள்ளைகள் மிடுக்கர்களாய், நல்ல குணம் பெற்றவர்களாய், தந்தை மிகுந்த வீரமும் வெற்றிகளை குவித்த தசரத சக்ரவர்த்தியுமாய், வசிஷ்டர் போன்ற மந்திரிகளுமாய், ஊர் அயோத்தியமாய், காலம் நல்ல காலமுமாய், இருந்ததால் அங்கு ஓரு பயமும் இல்லாமல் இருந்தது என்கிறார். கிருஷ்ணாவதாரத்தில் பிறந்த இடம் பகைவன் கம்ஸனின் வீடு, இடம் பார்த்து வந்து மறைந்து இருந்து துஷ்ட காரியம் செய்பவைகளை அனுப்பிவைக்கும் கொடூரனான கம்ஸன், தகப்பன் இடையன், ஊர் இடைச்சேரி, நண்பர்கள் தீம்பு செய்பவர்கள், காலம் கலி காலத்தோடு நெருங்கி இருக்கும் தூவாபர யுகம், என்ன வருகிறதோ என்று பரிதவிக்கும் ஆழ்வார்கள் என்கிறார். இப்படிபட்ட உன்னை மங்களாசாசனம் செய்வதைத் தவிர வேறு உண்டோ என்று சொல்வது ‘உன்னை பல்லாண்டு கூறுதுமே‘ என்பதில் விளங்கும்.
பிறந்தவாறும் வழந்தாவாறும் (திருவாய்மொழி 5.10.1), மற்றும் ‘கோவலனாய் வெண்ணை உண்ட வாயான் (அமலனாதிபிரான் 10) மற்றும் பல ஆழ்வார்களும் கண்ணனையே விரும்புவது சொல்லப் பட்டுள்ளது.
Leave a comment