எந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன் ஏழ்படி கால் தொடங்கி, * வந்து வழிவழி ஆட் செய்கின்றோம் திருவோணத் திருவிழவில், * அந்தியம் போதில் அரி உரு ஆகி அரியை அழித்தவனை, * பந்தனை தீரப் பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்று பாடுதுமே
பெரியாழ்வார் திருமொழி (1.1.6)
திருப்பல்லாண்டு 6
நானும் என் தகப்பனும், அவனுடைய தகப்பனும், அவனுடைய தகப்பனும் அவனுக்குத் தந்தையும் பாட்டனுமாகிய ஏழு தலைமுறைகள் தொடங்கி, (மங்களாசாசனம் பண்ணத்தக்க சமயங்களிலே வந்து, முறையாக அடிமை செய்கின்றோம், திருவோணம் ஆகிய திருநாளிலே (அசுரர் உடைய பலம் வளரும்) அந்தி வேளையிலே நரசிம்ம ரூபத்தை உடையவனாய், (தன் அடியவான பிரகாலாதனுக்கு) பகைவனான இரணியனை அழித்தவனுக்கு (அவனை அழித்ததினால் உண்டான) ஆயாசம் தீரும்படியாக பல்லாண்டு பல்லாயிரத்து ஆண்டு என்று கால தத்வம் உள்ள வரையில் மங்களாசாசனம் செய்வோம் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
மூன்றாவது பாசுரத்தில் பகவன்லாபார்த்திகளை அழைக்கும் போது ‘‘ஏழாட்காலும் பழிப்பிலோம் நாங்கள்’’ என்று தம்முடைய பெருமையைச் சொல்லி அழைத்தார். அப்படி அழைக்கப்பட்ட பகவன்லாபார்த்திகள் ‘நாங்களும் உங்களைப் போலவே ஏழுதலைமுறைகளாக எம்பெருமானுக்கு அடிமை செய்கிறவர்கள்’ என்று தங்களுடைய பெருமையையும் சொல்லி, எம்பெருமானுக்கு மங்களாசாசனம் செய்கிறார்கள் என்று சொல்லி அவர்கள் வந்து சேர்ந்ததை இந்த பாசுரம் சொல்கிறது.
எம்பெருமான் எந்த நக்ஷத்திரத்தில் அவதரித்தாலும் அவை எல்லாம் விஷ்ணு நக்ஷத்ரமாகிய திருவோண நக்ஷத்திரத்தின் அம்சமாயிருக்கத் தக்கவை. மேலும் திருநக்ஷத்திரம் சொல்லாத அவதாரங்களுக்கெல்லாம் திருவோண நக்ஷத்திரமே எடுத்து கொள்வது என்பது மரபு. தூணிலே நரசிங்கமாகத் தோன்றி இரணியனைக் கொன்று ப்ரஹ்லாதனைக் காத்தருளினதை இங்கே பல்லாண்டு பாடுகிறார்கள். இன்னொரு காரணம், ஜன்ம நக்ஷத்திரம் என்றால் அவனுக்கு வேண்டாதவர்களுக்கு அஞ்சி சொல்வதாகவும் கொள்ளலாம்.
அரிஉருவாகி என்று சொல்வதால் ஒரு காலமும் பார்க்காதே சர்வ காலமும் மங்களாசாசனம் செய்யும் வண்ணம் வடிவை உடையவன் என்று இருப்பதை சொல்கிறது. ‘நாரஸிம்ஹ பு: ஸ்ரீமாந்‘ (விஷ்ணு சகஸ்ரநாமம்)
[நரம் கலந்த சிங்க வடிவை உடையவன்; அதி மநோஹரமான திவ்ய ரூபத்தை உடையவன்.] என்றும், ‘அழகியான் தானே அரியுருவன் தானே‘ (நான்முகன் திருவந்தாதி 3.2) என்றும் ‘நரம் கலந்த சிங்கமாய்‘ (இரண்டாம் திருவந்தாதி 84) என்றும் மேற்கோள் காட்டப்படுகிறது.
அரியை அழித்தவனை என்றது ‘சுகிர்ந்து எங்கும் சிந்தப் பிளந்த திருமால் திருவடியே’ (மூன்றாம் திருவந்தாதி 95) என்ற பாடல் படி இரண்யனை குற்றுயிர் ஆக்கி விடாமல் முற்றும் அழித்தவனை என்கிறார். அவனை அழியச் செய்ததால் பின்புள்ளவர் பகைவராக மாற வாய்ப்பு உள்ளதால் ஆழ்வாருக்கு அச்சம் வர வாய்ப்பு உள்ளது என்கிறார்.
அரியை அழித்தவனை பந்தனை தீர என்று சொன்னது, இரணியனை அழித்த சோகம் தீர, வருத்தம் தீர, வாட்டம் தீர மங்களாசாசனம் செய்ய வேண்டுகிறார். பல்லாண்டு என்று ஒருமுறை சொல்லியதால் திருப்தி அடையாததால் கால தத்வமுள்ளவரை என்பதை பல்லாயிரத்தாண்டு என்று பாடி முடிக்கிறார்.
Leave a comment