திவ்ய பிரபந்தம்

Home

1.1.9 உடுத்துக் களைந்த நின்

உடுத்துக் களைந்த நின் பீதகவாடை உடுத்துக் கலத்ததுண்டு, * தொடுத்த துழாய் மலர் சூடிக் களைந்தன சூடும் இத் தொண்டர்களோம், * விடுத்த திசைக் கருமம் திருத்தித் திருவோணத் திருவிழவில், * படுத்த பைந்நாகணைப் பள்ளி கொண்டானுக்குப் பல்லாண்டு கூறுதுமே

பெரியாழ்வார் திருமொழி 1.1.9

திருபல்லாண்டு 9

மூன்றாம் பாசுரத்தில் (வாழாட் பட்டு) ‘வந்து மண்ணும் மணமும் கொண்மின்‘ என்று அழைக்கப்பட்ட பகவன்லாபார்த்திகள், ஆறாம் பாசுரத்தால் (எந்தை தந்தை) தாங்கள் ஆழ்வார் குழுவுடன் சேர்ந்ததை ‘வந்து வழி வழியாய் ஆட் செய்கின்றோம் ‘ என்று சொல்லிக் கொண்டார்கள். அவர்களை இந்த பாசுரத்தில் ஆழ்வார் ‘நின் பீதக வாடை ‘ என்று எம்பெருமானை முன்னிலை ஆக்கி அவர்களோடு கூடி பல்லாண்டு பாடுகிறார்.

திருவரையில் உடுத்து கழித்த (ஸ்வாமியான) உன்னுடைய திருப் பீதாம்பரத்தை உடுத்தும், (நீ அமுது செய்த) களத்தில் மிகுந்து இருப்பதை உண்டும் (உன்னால்) சூட்டிக் கொள்ளப்பட்டு களையப்பட்டதும் (உன்னுடைய அடியவர்களான எங்களால்) தொடுக்கப்பட்டதுமான திருத்துழாய் மலர்களை சூட்டிக்கொள்ளும் இப்படிப்பட்ட அடியார்களாக இருக்கிறோம். நாங்கள் ஏவின, திக்கில் உள்ள காரியங்களை நன்றாகச் செய்து, படுக்கப்பட்டு (அதனாலே) பணைத்த படங்களை உடைய திருவனந்தாழ்வானாகிற படுக்கையில் திருக்கண் வளர்ந்து அருளுகிற உனக்கு திருவோணம் என்னும் திருநாளிலே திருப்பல்லாண்டு பாடுவோம் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

அவன் உடுத்து களைந்தது இவர்களுக்கு (அநன்யபிரயோஜனர்களுக்கு) ஆபரணம் என்கிறார்.

விடுத்த திசைக் கருமம் திருத்தி என்பதைப் பார்ப்போம். ‘ பரவாநஸ்மி காகுத்ஸ்த த்வயி வர்ஷதம் ஸ்திதே! * ஸ்வயம் து ருசிரே தேபே க்ரிய தாமிதி மாம் வத (ஆரண்ய காண்டம் 15.7), அதாவது ககுத்ஸ்த வம்சத்தில் பிறந்தவரே! நீர் இருக்கையில் எப்போதும் நான் (உமக்கு) அடிமையாய் இருக்கிறேன். நீராகவே “அழகிய தேசத்தில் பர்ண சாலை கட்டப்படட்டும் ‘ என்று என்னை ஆஜ்ஞையிடு வீராக என்று லக்ஷ்மணன் ஸ்ரீ ராமருக்கு விண்ணப்பித்தான். அதே போல சொன்ன காரியத்தை செய்து முடிப்பவர்கள் என்கிறார். திசைக் கருமம் திருத்தி என்பது, அந்த திசையில் இன்னொருவரை அனுப்ப வேண்டாதபடி சொன்ன காரியத்தை செய்து முடிப்பது. சுவாமி ஏவின காரியத்தை குறைய செய்பவன் அதமன். அது குறையாமல் முடிப்பவன் மத்யமன் ; அதுக்கு மேலே அதுக்கு தேவையான மற்ற காரியங்களையும் விசாரித்து செய்து முடிப்பவன் உத்தமன் என்கிறார்.

கார்யே கர்மணி நிர் திஷ்டே யோ பஹூந்யபி ஸாதயேத் * பூர்வகார்யா விரோதே ஸ கார்யம் கர்த்த மர்ஹதி II (சுந்தர காண்டம் 41.5), அதாவது, செய்ய வேண்டிய காரியத்தைக் காட்டினவுடன், அந்தக்
காரியத்திற்கு விரோதமில்லால் பல காரியங்களையும் எவன் ஸாதிக்கிறானோ, அவனே காரியம் செய்யத் தகுந்தவன் என்கிற திருவடியே (ஹனுமான்) அவனாகிறான். ‘பிராட்டி இருந்த இடம் அறிந்து வா’ என்று சொன்னதற்கு, இருந்த இடமும் அறிந்து, ‘அவன் பலம் எப்படி ‘ என்று எம்பெருமான் கேட்டு அருளினால், ‘நான் அறிந்துஇலேன் ‘ என்று சொல்லாது, அங்கேயே பலப் பரிஷை பண்ணி, ஊரில் அரணையும் அழித்து வந்தான் அல்லவா.

ஏவின காரியத்தை குறைவில்லாமல் செய்தும் அதில் திருப்தி பிறக்காமல், திருவோண திருவிழாவில் என்ன நடக்குமோ என்று கவலை கொண்டு மங்களாசாசனம் செய்கிறார்கள். அதனாலும் திருப்தி கிடைக்காமல், திருவானந்தாழ்வான் மேல் சாய்ந்த அழகுக்கு மங்களாசாசனம் செய்கிறார்கள். இவனுடைய வடிவும் அவனுடைய வடிவும் சேர்ந்து ‘கிடந்ததோர் கிடக்கை’ (திருமாலை 23) என்று அளவிடமுடியாத அழகிலே கண் வளர்ந்து இருக்கின்ற அழகுக்கு பல்லாண்டு பாடுகிறார். ஓரு வெள்ளி மலையிலே காளமேகம் சாய்ந்தார் போல உள்ள அழகுக்கு மங்களாசாசனம் செய்வதை தவிர வேறு செய்ய இயலுமோ என்கிறார்.

ஒரு வெள்ளிமலையில் காளமேகம் சாய்ந்து கிடப்பதுபோல் ஆதிசேஷ சயனத்திலே எம்பெருமான் பள்ளி கொண்டிருக்கிற அழகுக்குப் பல்லாண்டு பாடுகிறார்கள்.

Leave a comment