அல் வழக்கொன்றும் இல்லா அணி கோட்டியர் கோன் அபிமான துங்கன் * செல்வனைப் போலத் திருமாலே, நானும் உனக்குப் பழவடியேன், * நல்வகையால் நமோ நாராயணா என்று நாமம் பல பரவி * பல்வகையாலும் பவித்திரனே உன்னைப் பல்லாண்டு கூறுவனே
பெரியஆழ்வார் திருமொழி (1.1.11)
திருப்பல்லாண்டு (11)
ஐந்தாம் பாசுரத்தாலே அழைக்கப்பட்ட ஐஸ்வர்யார்த்திகள், எட்டாம் பாசுரதினால் தாங்கள் திருந்தினார்கள் என்று கூறியதை பார்த்தோம். இந்த பாசுரத்தில் ஐஸ்வர்யார்த்திகள் எம்பெருமானை நோக்கி மங்களாசாஸநம் பண்ணுகிறார்கள். அல்வழக்கு ஒன்றுமில்லா என்பது, தேஹமே ஆத்மா என்று நினைப்பது போன்றவை.
லக்ஷ்மீ நாதனே, தவறான வழக்குகளில் (பழக்க வழக்கங்கள்) சிறிதும் இல்லாதவராய், (ஸம்ஸாரத்துக்கு) ஆபரணமான திருக்கோட்டியூரில் உள்ளவர்களுக்கு தலைவராய், ‘நான் எம்பெருமானுக்கு அடியேன்’ என்னும் அபிமானத்தில் உயர்ந்தவராய் உள்ள, செல்வ நம்பியை போல, அடியேனும், ஸ்வாமியான உனக்கு பழமையான அடிமையாய் இருக்கிறேன்; (ஸ்வரூபம், ரூபம், குணம், வீபூதி முதலிய) எல்லாவற்றினாலும் பாபத்தை போக்குகின்றவனே, அழகிய வகையில் நமோ நாராயணா என்று திருமந்திரத்தை அனுசந்தித்து உன்னுடைய பல திருநாமங்களையும் கிரமம் இல்லாமல் சொல்லி உனக்கு மங்களாசாசனம் செய்வேன் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
‘நான் எம்பெருமானுக்கு அடியேன் ‘ என்ற அபிமானத்தில் உயர்ந்தவராக உள்ள செல்வ நம்பியை போல, ஸ்வாமியான உனக்கு தானும் பழமையான அடியவனாக இருக்கிறேன் என்று பாடுகிறார்.
அல் வழக்கொன்றும் இல்லா என்பதை விளக்குகிறார். வழக்கு இல்லாதவை என்பவை :
- தேகத்தில் ஆத்ம புத்தி பண்ணுவது வழக்கில்லை
- ஜீவாத்மாவை ஸ்வதந்திரன் என்று எண்ணுவது வழக்கில்லை
- மற்ற தேவதைகளை பரதேவதை என்று எண்ணுவது வழக்கில்லை
- பகவத் பூஜை செய்வதற்கு பலன் பிரயோஜனம் என்று இருப்பது வழக்கில்லை
- அப்படி வேறு பலன் இல்லாமல் அநன்ய பிரயோஜனம் என்று இருந்தாலும், மோக்ஷத்திற்கு அவனைத் தவிர உபாயம் இருக்கும் என்ற எண்ணம் வழக்கமில்லை.
இனி வழக்காவது, இவர் போல சேஷிக்கு மங்களாசாசனம் செய்து கொண்டு இருப்பது என்கிறார்.
அபிமான துங்கன் செல்வனை என்பதை பார்ப்போம். மற்றவரிடம் அபிமானம் வைப்பது சேஷத்வ விரோதியாக இருக்கும் போது, ஆழ்வார் இப்படி கூறுவது, கர்மங்களால் உண்டான துர் மானங்கள் மாய்த்து, தாஸோகம் என்கிற வைஷ்ணவ அபிமானம் ஏற்கத்தக்கது ஆகி அதில் பூர்ணராய் இருப்பது. அதாவது ஞான பக்தி வைராக்கியங்களில் குறைவற்றவராக இருப்பது என்பது செல்வன் என்பதால் விளங்கும். கைங்கரியஸ்ரீ என்பதை கீழ் சொன்ன மேற்கோள்களால் விவரிக்கிறார்.
ஸர்வ ப்ரியகரஸ் தஸ்ய ராமஸ்யாபி ஸ்ரீரத: * லக்ஷ்மணோ லக்ஷ்மி ஸம்பந்நோ பஹி : ப்ராண இவாபர: II (பாலகாண்டம் 18.28) அதாவது, கைங்கர்ய லக்ஷ்மியை உடைய லக்ஷ்மணன், ராமனுக்கு சரீரத்தைக் காட்டிலும், எல்லாப் பிரியத்தையும் செய்பவனாயும், வெளியில் இருக்கும் மற்றொரு ப்ராணன் போலவும் விளங்கினான்.
பவாம்ஸ்து ஸஹ வைதேஷ்யா கிரிஸாநுஷ ரம்ஸ்யதே * அஹம் ஸர்வம் கரிஷ்யாமி ஜாக்ரதஸ் ஸ்வபதஸ்ச தே’ – (அயோத்யா 31.25), அதாவது, நீர் வைதேஹி யுடன் கூட மலைத் தாழ்வரைகளில் விளையாடுவீர் ; அடியேன் நீர் விழித்துக் கொண்டிருக்கும் போதும், தூங்கும்போதும் உமக்கு எல்லா அடிமைகளையும்(சேவைகளையும்) செய்வேன் என்றாகும்.
பழவடியேன் என்று சொன்னது, முன்பு ஐஸ்வர்யார்த்திகளாய் இருந்து இன்று ஸ்வரூப ஞானம் பிறந்ததைச் சொல்கிறார்.
நல்வகையால் நமோ நாராயணா என்றது, நாராயணனுக்கே உரியவன், எனக்கு உரியவன் அல்லன் என்பதாகும்.
ஸ்வரூபம், ரூபம், குணம், விபூதி என்ற பலவகையிலும் பாவத்தை போக்குகின்றவனே என்பதை, பல்வகையாலும் பவித்திரனே என்பதன் மூலம் சொல்கிறார். பிரயோஜனபரராக இருந்ததை போக்கி, அகங்கார மமஹாரங்களைப் போக்கி, சேஷத்வ அசுத்திகளைப் போக்கி நிறுத்தியவனே என்கிறார்.
ஸ்வரூப ஞானம் வந்தது திருமந்திர ரகஸ்யத்தை அறிந்ததால் என்பது, நல்வகையால் நமோ நாராயணா என்பதன் மூலம் விளங்கும்.
Leave a comment