திவ்ய பிரபந்தம்

Home

1.1.5 அண்டக் குலத்துக்கு

அண்டக் குலத்துக்கு அதிபதியாகி, அசுரர், இராக்கதரை, * இண்டைக் குலத்தை எடுத்துக் களைந்த இருடீகேசன் தனக்கு, * தொண்டக்குலத்தில் உள்ளீர் வந்தடி தொழுது ஆயிர நாமம் சொல்லி, * பண்டைக் குலத்தைத் தவிர்ந்து பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்மினே

பெரியாழ்வார் திருமொழி 1.1.5

திருப்பல்லாண்டு 5

அண்டங்களின் சமூகத்திற்கு நியமிப்பவனாக, அசுரர்களும் ராக்ஷசர்களும் ஆகிற நெருங்கின கூட்டத்தை திரட்டி ஒழித்த இந்திரியங்களுக்கு அதிபதியான எம்பெருமானுக்கு அடிமை செய்பவர்கள் குலத்திலே உள்ளவர்களான நீங்கள் எங்கள் கோஷ்டிக்கு வந்து, அச்சுதனுடைய திருவடிகளை சேவித்து, அவனுடைய ஆயிரம் நாமங்களையும் வாயாரச் சொல்லி புருஷோத்தமனிடம் சென்று மற்றொரு பலனைப் பெற்று அகலுபவர்களாய் இருந்த பழைய ஜன்மத்தை நீக்கி, பல காலம் பல்லாண்டு மங்களாசாசனம் செய்யுங்கள் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

இந்த பாசுரத்தில் இரண்டு வகை ஐஸ்வர்யார்த்திகளை அழைக்கிறார்.

  • நெடுநாளாக வைத்து இருந்து, பிறகு தொலைந்த செல்வத்தை மறுபடியும் அடைய விரும்புகிறவர்கள்,
  • ஒன்றுமே இல்லாமல் இருந்து, புதிதாகச் செல்வம் அடைய விரும்புகிறவர்கள் என்ற

இருவகைபட்ட ஐஸ்வர்யார்த்திகளையும் அழைத்து இனி ஆயிரம் திருநாமங்களையும் அவனை அடைவதற்காகவே பாட எங்களுடைய கோஷ்டியிலே சேர்ந்து மங்களா சாஸனம் செய்ய வாருங்கள் என்று அழைக்கிறார். அண்டக் குலத்துக்கு அதிபதியாகி, தொண்டக்குலத்தில் உள்ளீர் வந்தடி தொழுது என்று ஒரு பிரிவினைரையும், அசுரர், இராக்கதரை, இண்டைக் குலத்தை எடுத்துக் களைந்த இருடீகேசன் தனக்கு, தொண்டக்குலத்தில் உள்ளீர் வந்தடி தொழுது என்று மற்றொரு பிரிவினரையும் சொல்கிறது.

எல்லா தேவதைகளுக்கும் மிகப் பெரிய ஐஸ்வர்யம் என்று அவை கருதுவது அவைகள் ஆளும் அதிபதி என்ற பெருமையை. எனவே இந்த பாட்டில், மூன்று உலகங்களுக்கும் அதிபதியே என்று அழைக்காமல், அந்த தேவதைகள் எம்பெருமானை துதிக்கின்ற விதத்தில் எம்பெருமானை அண்டக் குலத்துக்கு அதிபதி ஆழ்வார் அழைக்கிறார்.

எடுத்துக் களைந்த என்று சொன்னது, ‘கிள்ளிக் களைந்தானை ‘ (திருப்பாவை 13) என்பது போல, அடியவர்கள் பக்கம் (அசுரர்களால்) ஓரு வெப்பமும் / வராதபடி பார்த்துக்கொள்ளுவதைச் சொல்கிறது.

தொண்டக்குலத்தில் உள்ளீர் என்று சொல்லி, ஓரு புதிய சொத்தினை குறிக்கிறார். அதாவது ஐஸ்வர்யத்தை வேண்டியவர்கள் இப்போது பகவத் பிரேமம் உள்ளவர்க்களாய் ஆனதை சொல்கிறார். அதாவது தேகமே ஸ்வரூபம் என்று இருந்தவர்கள் இப்போது சேஷத்தவமே ஸ்வரூபம் என்று இருக்கிறார்கள் என்கிறார். ஐஸ்வர்யம் பிரயோஜனமாக இருந்தது, இப்போது திருவடி தொழுது என்று திருவடிகளே பிரயோஜனம் ஆயிற்று என்கிறார்.

ஐஸ்வர்யம் வேண்டியவன் இப்போது தன்னை வேண்டுகிறான் என்று எம்பெருமான் உவப்பதாலும், அப்படி நோக்கிய அழகு நித்யமாய் இருக்க வேண்டும் என்று, சடக்கென்று மங்களாசாசனம் செய்ய சொல்கிறார்.

Leave a comment