நாலாயிர திவ்யப்ரபந்தங்களில், முதலில் அனுசந்திக்கும், பெரியாழ்வார் பாசுரங்களுடன், இப்பதிவுகளை ஆரம்பிக்கலாம்.
எல்லா ஆழ்வார்களுமே பரமாத்மாவான ஸ்ரீ மகாவிஷ்ணுவிடம் அதிக பிரேமையும், பக்தியும் காதலும் மரியாதையும் கொண்டு உள்ளார்கள். பெரியாழ்வார், மற்ற எல்லா ஆழ்வார்களையும் விட, பெருமாளின் மேல், பக்தியும் காதலும் மரியாதையும் மட்டும் இல்லாமல், சிறிது அதிகமாகவே பொறுப்பையும் அல்லது பரிவையும் கொண்டு உள்ளார். இதனை நம் பெரியவர்கள், பொங்கும் பரிவு என்றும், ஒரு தாய், தன் குழந்தையிடம் காட்டுவதைவிட சற்று அதிகமான அன்பு என்றும் குறிப்பிடுகிறார்கள். இதுவே பெரியாழ்வாரை, “பல்லாண்டு பல்லாண்டு” என்று பாட வைத்தது. இந்த பல்லாண்டு பாசுரமே உலகில் உள்ள எல்லா விஷ்ணு கோவில்களிலும் காலையில் சொல்லும் முதல் ஸ்லோகம் ஆகும். அதே போல், பல்லாண்டு பாசுரமே, நாலாயிர திவ்ய பிரபந்த தொகுப்பின் முதல் பாடலும் ஆகும். 12 பாசுரங்கள் உள்ள இந்த பல்லாண்டு தொகுப்பில், பெரியாழ்வார் பெருமாளை பற்பல ஆண்டுகள் நன்றாக வாழ மனமார வாழ்த்துகிறார். அதற்கு காரணம், பெருமாள் நன்றாக இருப்பதால்தான் நாம் எல்லோரும் நன்றாக இருக்க முடியம் என்று பெரியாழ்வார் நம்புகிறார். இதற்கு திருப்பல்லாண்டு என்று பெயரிட்டு நாலாயிர திவ்ய பிரபந்தத்தின் முதலில் வைத்து உள்ளார்கள். மணவாள மாமுனிகள் தமது உபதேச ரத்தின மாலையில் வேதத்திற்கு ஓம் என்பது முதல் வார்த்தையாக இருப்பது போல் திவ்யப் பிரபந்தங்களுக்கு முதல், திருப்பல்லாண்டு என்பது என்கிறார்.
திருப்பல்லாண்டுதனில், ஆழ்வார் இந்த உலகில் உள்ள மூன்று வகையான (எல்லா) ஜீவாத்மாக்களையும் கருத்தில் கொண்டு பாடி உள்ளார்.
- இந்த உலகத்தில் உள்ள ஐஸ்வர்யங்களை வேண்டும் ஜீவாத்மாக்கள்,
- பரமனையே வேண்டும் பகவன் லாபார்த்திகள்,
- இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட கைவல்யார்த்திகள் என்று ஜீவாத்மாக்கள் மூன்று வகைப்படும்.
முதல் இரண்டு பாடல்களால், பெரியாழ்வார், எம்பெருமானுக்கு பல்லாண்டு பாடுகிறார், அதன் பின் உள்ள பாடல்களால், பகவன்லாபார்த்தி, கைவல்யார்த்தி மற்றும் ஐஸ்வர்யார்த்திகள் என்ற மூன்று வகையாக மக்களையும் தனித்தனியே மூன்று பாடல்கள் மூலம் வரவேற்றதையும், அவர்கள் ஆழ்வார் குழுவுடன் சேர்ந்ததை அடுத்த மூன்று பாடல்கள் மூலமும் பின்பு அடுத்த மூன்று பாடல்கள் மூலம் அவர்களுடன் சேர்ந்து எம்பெருமானுக்கு பல்லாண்டு பாடுகிறார். திருபல்லாண்டில் ஆழ்வார், இந்த மூன்றுவகையான ஜீவாத்மாக்களையும், பரமாத்மாவை வாழ்த்தி பாடி மோக்ஷம் பெற அழைக்கிறார். இந்த விதத்தில், பெரியாழ்வார் மற்ற ஆழ்வார்களில் இருந்து சிறிது வேறு படுகிறார்.
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்து ஆண்டு பலகோடி நூறாயிரம், மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன் சேவடி செவ்வித் திருக் காப்பு
பெரியாழ்வார் திருமொழி (1.1.1)
திருபல்லாண்டு (1)
சாணூரன் முஷ்டிகன் முதலிய மலளர்களை அடக்கிக் கொன்ற, திடமான, மகா பலம் பொருந்திய திரு தோள்களை உடைய மாணிக்கம் போன்ற வர்ணத்தையும் ஸ்வபாவத்தையும் உடையவனே, உன்னுடைய சிவந்த திருஅடியின் அழகுக்கு பல எண்ணமுடியாத வருஷங்கள்; (மனித லோக வருஷங்கள்), பல்லாண்டு (தேவ வருஷங்களில் எண்ண முடியாத வருஷங்கள்) பல்லாயிரத்தாண்டு (பிரம்மாக்களுடைய கணக்கில்லாத வருஷங்கள்) அதாவது கால தத்வம் உள்ளவரை, குறைவற்ற காப்பு உண்டாக வேண்டும் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
சௌந்தர்ய கல்யாண குணவிசேஷமான விக்ரகத்துடன் பொருந்திய சேஷியானவனை ஆபத்து நிறைந்த பூமியில் காண்கையாலே ‘இத்தால் இவனுக்கு என்ன தீங்கு வருகிறதோ ‘ என்று அச்சம் கொண்டு கால தத்வம் உள்ளவரை இந்த செவ்வி மாறாதே நித்யமாய் செல்ல வேண்டும் என்று மங்களாசாசனம் செய்கிறார். மங்களாசாசனம், என்பது ‘பல்லாண்டு’ என்றும், ‘ஜிதம்’ என்றும், ‘நம’ என்றும் ‘தோற்றோம்’ என்று போற்றி என்று பலவாறு கூறப்படுகிறது.
ஆழ்வாரின் பயதைப் போக்க வேண்டும் என்று இவன் இராமாயண காலத்தில் சுக்ரீவனுக்கு ஏற்பட்ட பயத்தைப் போக்க தம் மிடுக்கைக் காட்ட அது அங்கு பலித்தது கண்டு இங்கும் இவன் தோள்களைக் காட்ட அதுவே இவருக்கு பயம் அதிகமாவதற்கு காரணம் ஆயிற்று. அதனால், முதலில் முஷ்டிக சாணூரர்களை வென்ற திருத்தோள்களுக்கு பல்லாண்டு பாடுகிறார். திருவடிகளுக்கு பல்லாண்டு பாடுவது மற்ற எல்லா திவ்ய அவயங்களுக்கும் பல்லாண்டு பாடுவதற்கு ஒப்பாகும்.
அடிக்கீழ் (திருவாய்மொழி 6.10.10) என்றும், ‘ நின் செம்மா பாதபற்புத் தலை சேர்த்து‘ (திருவாய்மொழி 2.9.1) என்றும், ‘அடிபோற்றி ‘ (திருப்பாவை 24) என்பதாலும் ஆழ்வார்கள் எப்போதும் திருவடிகளை விடமாட்டார்கள் என்பது கருத்து. ‘அரும்பினை அலரை ‘ (பெரிய திருமொழி 7.10.1)ல் சொன்னதைப் போல, அதாவது அரும்புபோல குமாரத் தன்மையுள்ளவனும், மலர்ந்த புஷ்பம் போலே யௌவன பருவ முள்ளவனும் என்று செவ்விய திருவடிகளை குறிப்பிட்டு, அவனை அடைவதற்காக திருவடிகளை வணங்கும் போதும், திருஅடிகளை நினைத்து ஆனந்திக்கும் போதும், மங்களாசாசன வேளையின் போதும், ஒரு வித்தியாசமும் இல்லாமல் ஆழ்வார்கள் பாடுவதை சொல்கிறார்.
இந்த பாடலை பாடும்போது ஆழ்வார், மிகுந்த ஆனந்தத்தில் மூழ்கி மகிழ்ந்து இருந்தார் போலும், எந்த ஒரு வினைச் சொல்லையும் பயன் படுத்தாமல், ஆனால் தான் சொல்லவந்த எந்த ஒரு கருத்தையும் விடாமல், பாசுரத்தின் முழு அர்த்தத்தையும் சொல்லி விட்டார்.
எல்லாப் பாடல்களுக்கும் இது தான் முகவுரை போல உள்ளது என்கிறார். ‘மல்லாண்ட திண் தோள் மணிவண்ணா, பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்து ஆண்டு, பல கோடி நூறாயிரம் உன் செவ்வடி செவ்வு திருக்காப்பு ‘ என்று பார்க்க வேண்டும் என்கிறார்.
Leave a comment